மும்பையில் சிவாஜி பார்க்கில் சிவ சேனா சார்பில் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் கட்டுவதற்காக நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் எங்களது கட்சி உறுதியாக உள்ளது.

வாக்குறுதியை காப்பாற்றுவதற்காக ராமர் வீட்டை விட்டு வெளியேறியது போல், அவருக்காக கோயில் கட்டுவோம் என்ற எங்களது வாக்குறுதியை எங்களால் மீற முடியாது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கக்கூடாது என யார் சொல்லுகிறார்கள்?  நாங்கள் இங்கு கூட்டணி வைத்துள்ளோம் மற்றும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் உத்தர பிரதேசத்தில் கூட்டணி வைத்தன. மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டார்கள் ஆனால் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்துத்வா காரணத்துக்காகத்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. அங்கு பா.ஜ.க.வும், சிவ சேனாவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் சிவ சேனா 124 தொகுதிகளிலும், 164 தொகுதிகளில் பா.ஜ.க.வும் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளும் போட்டியிடுகின்றன.