தமிழர்கள் விடுதலை விஷயத்தில் 13 மாதங்களாகியும் இன்று வரை ஆளுனர் முடிவு எடுக்கவில்லை என்றால் அது எந்த வகையில் நியாயம்? இது கடுமையான இனப்பாகுபாடு அல்லவா? என பயங்கர அப்செட்டில் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

சீக்கிய மத நிறுவனரும், அதன் 10 குருமார்களில் ஒருவருமான குருநானக்கின் 550 ஆவது பிறந்த நாளையொட்டி, 550 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங்கின் படுகொலை வழக்கில் பயங்கரவாதி பல்வந்த் சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படிருப்பதுடன், 25 முதல் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 8 பயங்கரவாதிகளை விடுதலை செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

குருநானக்கின் 550-ஆவது பிறந்தநாளையொட்டி, 550 பேர் விடுதலை செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான். தமிழகத்திலும் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் பிறந்தநாள்களையொட்டி இவ்வாறு ஏராளமானவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மீதமுள்ள 9 பயங்கரவாதிகள் தொடர்பான முடிவு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள பல்வந்த் சிங் ரஜோனா பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாவார்.

பஞ்சாபில் பயங்கரவாதத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை மேற்கொண்ட அம்மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பியாந்த்சிங் 31.08.1995 அன்று சண்டிகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்துக் கொண்டு மகிழுந்தில் ஏற முயன்ற போது, பாபர்கல்சா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த தில்வார் சிங் என்பவர் நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். ஒருவேளை தில்வார் சிங்கின் உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்காமல் போயிருந்தால், இரண்டாவது மனிதகுண்டாக செயல்பட பல்வந்த் சிங் தயாராக இருந்தார். வழக்கு விசாரணையின் போது தம்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதுடன், அதை பெருமையாக கருதுவதாக தெரிவித்தார். தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட போதும் கூட, அதை குறைக்க வேண்டும் என்று கருணை மனுவை அவர் தாக்கல் செய்யவில்லை.

2012-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் பாதல் கொடுத்த கருணை மனுவின் அடிப்படையில் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் அளித்த மனுவின் அடிப்படையில் அவரது தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதம் உச்சத்தில் இருந்தபோது பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக, பல்வேறு மாநில சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 8 பயங்கரவாதிகள் குருநானக்கின் பிறந்தநாளான நவம்பர் 29-ஆம் தேதி விடுதலை செய்யப்படவுள்ளனர். பல்வந்த் சிங்கும் அதேநாளில் விடுதலையாக வாய்ப்புள்ளது.

பல்வந்த்சிங் உள்ளிட்ட 9 பேரும் தடா சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் விடுதலைக்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை. அவர்களின் விடுதலைக்காக பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கடந்த 14-ஆம் தேதி விண்ணப்பித்தார். அடுத்த 14 நாட்களில் அவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கிறது. ஆனால், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், இராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர் விடுதலை பற்றி 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்த போது, அதுகுறித்து தமிழக அரசிடம் கருத்து தெரிவிக்க வேண்டிய மத்திய அரசு, உடனடியாக உச்சநீதிமன்றத்திற்கு சென்று விடுதலைக்கு தடை வாங்குகிறது.

தொடர்ந்து நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டது. அதனடிப்படையில், 7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை, கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி அமைச்சரவை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்து இன்றுடன் 387 நாட்கள் ஆகியும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பஞ்சாப் மாநில அரசு அளித்த பரிந்துரை மீது 14 நாட்களில் மத்திய அரசு முடிவு எடுக்கிறது; தமிழர்கள் விடுதலை விஷயத்தில் 13 மாதங்களாகியும் இன்று வரை ஆளுனர் முடிவு எடுக்கவில்லை என்றால் அது எந்த வகையில் நியாயம்? இது கடுமையான இனப்பாகுபாடு அல்லவா? என பயங்கர அப்செட்டில் கேள்வியெழுப்பியுள்ளார்.

இத்தனைக்கும் பல்வந்த்சிங் ரஜோனா பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த்சிங் படுகொலையில் தமக்குரிய பங்கை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதை பெருமையாக கருதுவதாகவும் கூறியிருக்கிறார். மற்றவர்களும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பது மட்டுமின்றி தங்களை பயங்கரவாதிகளாக அறிவித்துக் கொண்டவர்கள். மாறாக பேரறிவாளன் காவல்துறை அதிகாரியால் திரித்து எழுதப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டவர். மற்றவர்களும் ராஜிவ் கொலை வழக்கில் தெரிந்து எந்த தவறையும் செய்யாதவர்கள். பஞ்சாபில் காங்கிரஸ் முதலமைச்சரை படுகொலை செய்தவர்களை விடுதலை செய்ய காங்கிரஸ் அரசே பரிந்துரைக்கிறது; மத்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டு உடனடியாக உத்தரவு பிறப்பிக்கிறது. ஆனால், பேரறிவாளன் குற்றமற்றவர் என புலனாய்வு அதிகாரியும், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதியும் கூறிய பிறகும், 29 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த அவரும், மற்றவர்களும் விடுவிக்கப்படவில்லை என்றால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தத்துவத்தை ஏற்க முடியவில்லை.

ஏற்கனவே கருணை அடிப்படையில் விடுதலை செய்வதில் நடிகர் சஞ்சய்தத்துக்கு காட்டப்பட்ட சலுகை 7 தமிழர்களுக்கும் மறுக்கப்பட்டது. இப்போது பஞ்சாபியர்களுக்கு ஒரு நீதி; தமிழர்களுக்கு ஒரு நீதி என்பதை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாளில் விடுதலை செய்வதற்கு ஆளுனர் ஆணையிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.