Asianet News TamilAsianet News Tamil

தியாகம் தான் உங்களை உயர்த்தும்... தீயா வேலை செய்யணும்... தொண்டர்களுக்கு கடுதாசி போட்ட ராமதாஸ்!!

"பா.ம.க 31-ஆவது ஆண்டு விழா: புதிய வெற்றிப் பயணத்தின் தொடக்கமாகட்டும்!" - பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.  

Ramadoss Wrote letter to PMK cadre
Author
Chennai, First Published Jul 16, 2019, 11:04 AM IST

"பா.ம.க 31-ஆவது ஆண்டு விழா: புதிய வெற்றிப் பயணத்தின் தொடக்கமாகட்டும்!" - பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.  

அவர் எழுதிய கடிதத்தில்... பாட்டாளி சொந்தங்களே...

பாட்டாளி மக்கள் கட்சி ஜூலை 16-ஆம் தேதி 30 ஆண்டுகளை நிறைவு செய்து 31-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆண்டுகள் 30 தான் என்றாலும் பாட்டாளி மக்கள் கட்சி படைத்துள்ள சாதனை அத்தியாயங்கள் ஏராளமானவை. உயிரோட்டமுள்ள இயக்கம் என்பதற்கு உதாரணமாக திகழ்வது பாட்டாளி மக்கள் கட்சி தான். அதற்கு பின்னணியும், முன்னணியுமாய் திகழ்பவர்கள் நீங்கள் தான்.

ஓர் அரசியல் கட்சி உயிரோட்டமானதாக திகழ தொண்டர்களின் உணர்வுகளை தலைமை புரிந்து வைத்துக் கொண்டு, அதற்கு மதிப்பளித்து செயல்படுவதும், தலைமையின் எதிர்பார்ப்புகளை தொண்டர்கள் புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் துடிப்பாக செயல்படுவதும் அவசியம் ஆகும். அத்தகைய உணர்வுகள் நமது கட்சியில் நிறைந்து காணப்படுவதால் தான் பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டு அரசியலில் அர்த்தமுள்ள அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. அது தான் நமது வலிமையும் சிறப்பும் ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சி கடந்த ஆண்டு இதே ஜூலை 16-ஆம் தேதி 30-ஆம் ஆண்டு விழாவை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி பயணத்தைத் தொடங்கியது. மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கூட்டணி அமைத்தோம்; கடுமையாக உழைத்தோம். ஆனால், முடிவுகள் நமது எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் எதிராக அமைந்தன. அந்த சோகத்திலும் பெரும் ஆறுதல் தமிழகம் தவறானவர்களின் கைகளுக்கு செல்லாமல் தடுத்தது பா.ம.க. என்பது தான்.

மக்களவைத் தேர்தல் மாயத் தேர்தலாகவே நடந்து முடிந்தது. நமது எதிரிகள் கொள்கைகளை பேச வில்லை. மக்கள் வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை பேசவில்லை. மாறாக குழந்தைகளை கவர்ந்து செல்ல நினைக்கும் கடத்தல்காரர்கள், குழந்தைகளுக்கு பிடித்த மிட்டாய்களையும், பொம்மைகளையும் காட்டி மயக்கியதைப் போன்று ‘‘ உங்கள் வீட்டில் உள்ள நகைகளையெல்லாம் வங்கிகளுக்கு கொண்டு சென்று வேண்டும் அளவுக்கு அடகு வைத்து பணம் வாங்கிக் கொள்ளுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன்களை தள்ளுபடி செய்து விடுகிறோம்’’ என்று வாக்காளர்களுக்கு ஆசை காட்டினார்கள். மக்களும் அதை நம்பி ஏமாந்தார்கள். சாத்தியமற்ற தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கக் கூடாது என்ற விதிகளை மீறி வழங்கப்பட்ட இந்த தேர்தல் வாக்குறுதியை தேர்தல் ஆணையமும் கண்டு கொள்ளவில்லை; கண்டிக்கவும் இல்லை. நாமும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.

Ramadoss Wrote letter to PMK cadre

அதன் விளைவு தான்.... நமது அணி முன்வைத்த உண்மைகள் தோற்றன. அவர்கள் முன்வைத்த பொய்கள் வென்றன. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை தமிழ்நாட்டு மக்கள் முழுமையாக உணர்ந்துள்ளனர். தங்களின் தவறுகளை திருத்திக் கொள்ளவும், அவற்றுக்கான பரிகாரங்களைத் தேடவும் ஆயத்தமாகின்றனர். இது அடுத்து வரும் தேர்தலில் தெரியும்.

மற்றொருபுறம் தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்ய பாட்டாளிகளாக நீங்களும் தயாராகி விட்டீர்கள். பள்ளத்திலிருந்து மேட்டை நோக்கி ஏறும் ஆடு அந்த முயற்சியில் வெற்றி பெற முடியாமல் சரிந்து தரைக்கு வந்து விடும். ஆனால், அதற்காக அதன் முயற்சியில் பின்வாங்கி விடாது. முன்பு முயன்றதை விட அதிக வேகத்தில் ஓடிச் சென்று மேட்டின் மீது ஏறி விடும். அதைப் போலத் தான் நீங்களும் தோல்வி குறித்த சிந்தனைகளில் இருந்து விடுபட்டு, அடுத்த வெற்றிக்காக அயராது உழைக்க தயாராகி விட்டீர்கள். இந்த எழுச்சி பாராட்டத்தக்கதாகும்.

சென்னைக் கடற்கரை சீரணி அரங்கில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டத் தொண்டர்கள் கூடியிருந்த வரலாற்று நிகழ்வில் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, அன்று முதல் இன்று வரை ஏற்றுக்கொண்ட நிலைப்பாட்டுக்கு எதிராக எதையும் செய்ததில்லை. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களுக்கு சேவை செய்வது தான் அரசியல் கட்சிகளின் நோக்கம் என்றாலும், ஓர் கட்சி எத்தனை முறை ஆட்சி செய்தது என்பதை விட, மக்கள் நலனுக்காக எத்தனைத் திட்டங்களைச் செயல்படுத்தக் காரணமாக விளங்கியது என்பது தான் மிகவும் முக்கியம் ஆகும். அந்த வகையில் பார்த்தால் கடந்த 30 ஆண்டுகளில் மக்கள் பிரச்சினைக்காக பாட்டாளி மக்கள் கட்சி எத்தனையோ போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றிருக்கிறது.

குறிப்பாக தமிழகத்தின் அனைத்து சீரழிவுகளுக்கும் காரணமான மதுவுக்கு எதிராக போராடி வரும் பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அரசியல் அழுத்தம் காரணமாகவும், சட்டப்போராட்டம் மூலமாகவும் தமிழகத்தில் 4000-க்கும் கூடுதலான மதுக்கடைகளை மூட வைத்தது. படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு அறிவித்திருப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன்மை காரணமாகும்.

சமூக நீதி, கல்வி, வேலைவாய்ப்பு, மக்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள் ஆகியவற்றுக்காக போராடுவதில் சமரசம் செய்து கொள்ளாத கட்சியாக பா.ம.க. திகழ்கிறது. கல்வி - வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20% இட ஒதுக்கீடு, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு, மருத்துவம் - பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ரத்து, சமச்சீர்க் கல்வித் திட்டம், நதிநீர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கானப் போராட்டங்கள் என அதிகாரத்தில் இல்லாமலேயே பா.ம.க. படைத்த சாதனைகளின் பட்டியல் நீளமானது.

Ramadoss Wrote letter to PMK cadre

அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து அறிமுகப்படுத்திய தேசிய ஊரக சுகாதார இயக்கம், 108 அவசர ஊர்திச் சேவை, பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை, குட்கா உள்ளிட்ட போதைப்பாக்குகளுக்குத் தடை, தமிழகத்திற்கு கொண்டு வந்த சுமார் ரூ.22,000 கோடி மதிப்புள்ள மருத்துவத் திட்டங்கள் உள்ளிட்ட சாதனைகளை சொல்லி மாளாது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை அமைச்சர்களாக இருந்த போது தான் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இப்படியாக பா.ம.க.வின் மணிமகுடத்தை ஏராளமான சாதனை வைரங்கள் அலங்கரிக்கின்றன. இப்போதும் மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக போராடுவதில் பா.ம.க. தான் உண்மையான எதிர்க்கட்சியாக திகழ்கிறது.

மக்களவைத் தேர்தலில் மகுடம் சூட முடியாத நிலையில், அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல்களிலும், அதற்கடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நமது அணி பிரம்மாண்டமான வெற்றிகளை குவிப்பது தான் நமது இலக்காக இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி நாம் வேகமாகவும், விவேகமாகவும் பயணிப்பதன் தொடக்கமாக அமையும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் 31-ஆவது ஆண்டு விழாவை தமிழகம் மற்றும் புதுவையில் இதுவரையில்லாத வகையில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

கட்சியின் ஆண்டு விழாவையொட்டி அனைத்து கிராமங்களிலும், நகரம் மற்றும் பேரூர்களில் அனைத்து வட்டங்களிலும் கட்சிக் கொடியேற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும். அத்துடன், வாய்ப்புள்ள இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகளை மக்களுக்கு விளக்க வேண்டும். மொத்தத்தில் நமது வெற்றி இலக்கை எட்டுவதற்காக கடுமையாக உழைக்க நமது பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் கட்சித் தொடக்க நாளில் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படிக்கு ராமதாசு அய்யா... என எழுதகியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios