எடப்பாடியாரின் சொந்த மண்ணான சேலம் மாவட்டத்தில் துவங்கி அப்படியே சென்னை வரை வன்னியர் சமுதாய மக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். எக்கச்சக்க சட்டமன்றங்களில் இந்த சமுதாயம் விரும்பும் நபரே ‘எம்.எல்.ஏ.’வாகும் நிலை இருக்கிறது. அந்த வகையில்தான் வடமாவட்டங்களை நம்பி தில்லு அரசியல் செய்து கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். என்னதான் கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த மக்கள் தனது பா.ம.க.வை துடைத்து தூர வைத்துவிட்டாலும் கூட, மீண்டும் முன்னேறி வருவதற்காக பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். 

அதிலும் வரும் தேர்தல்கள் ஒவ்வொன்றுமே டாக்டர் ராமதாஸுக்கும், ஜூனியர் டாக்டர் அன்புமணிக்கும் மிக மிக முக்கியமான காலகட்டம். இதனால் தங்கள் சமுதாய வாக்கு வங்கியின் ஒரு வாக்கு கூட தங்கள் கையை மீறி போய்விட கூடாது! என்று நினைக்கிறார்கள். ஆனால் எடப்பாடியாரின் சமீபத்திய நடவடிக்கை ஒன்றின் மூலம் டாக்டரின் அடிமடியிலேயே கை வைக்கப்பட்டுள்ளது! என்கிறார்கள். அது என்ன விவகாரம்?...அதாவது வன்னியர் சமுதாயத்தை வைத்து பல அமைப்புகள் இயங்கி வருகின்றன. ஆனால் இவை அத்தனையின் பொது கோரிக்கைகள் என்று சில இருக்கின்றன. 

அவற்றில் முக்கியமானது, ‘ஆமசாமி படையாச்சியாரின் பிறந்த நாலை அரசு விழாவாக கொண்டாட வேண்டும், அவருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும், தமிழகமெங்கும் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற சுமார் ரெண்டு லட்சம் கோடி மதிப்பிலான வன்னியர் சொத்துக்கள மீட்க வேண்டும்.’ என்பதே அது. இதை பல வருடங்களாக வலியுறுத்தியும் ஜெ., கருணாநிதி இருவரும் கண்டுகொள்ளவில்லையாம். ஜெயலலிதா கூட விழுப்புரத்துக்கு ராமசாமி படையாச்சியார்  மாவட்டம்! என பெயர் வைத்தார். ஆனால் சட்ட ஒழுங்கு சிக்கல்களை சுட்டிக்காட்டி பிற்காலத்தில் கருணாநிதி அதை மாற்றியமைத்தார். பெயர் வெச்சாரே தவிர ஜெ., மற்றபடி எதுவும் பெரிதாய் வன்னியர் மக்களுக்கு செய்துவிடவில்லை என்பது அவர்களின் புலம்பல்.

 

ஆனால் எடப்பாடியாரிடமும் இந்த கோரிக்கைகளை கொடுத்திருக்கின்றனர் வன்னியர் சங்க நிர்வாகிகள். அதிரடியாய் அவற்றில் இரண்டை நிறைவேற்றிவிட்டாராம் மனுஷன். கடந்த மாதம் 16-ம் தேதி ராமசாமி படையாச்சியாரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வைத்தார். அதேபோல், கடலூர் மஞ்சக்குப்பத்தில் படையாச்சியாருக்கு மணி மண்டபம் கட்ட அறிவுப்பு வெளியிட்டு, அப்பணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல்லும் நாட்டிவிட்டார். இதனால் எடப்பாடியாரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட துவங்கிவிட்டனர் வன்னியர் அமைப்புகள். 

கேட்டதும் கொடுத்தவரே எடப்பாடி ஐயா! என்று அவரை  புகழ்ந்து, பாராட்டு விழா ஒன்றையும் ஏற்பாடு செய்துவிட்டனர். வரும் 28-ம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா மண்டபத்தில் இந்த விழா நடக்கிறது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வன்னியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். இந்த விழாவுக்கு முதலில் எடப்பாடியார் ஒப்புக்கொள்ளவில்லையாம். பின் அ.தி.மு.க.வை சேர்ந்த முக்கியபுள்ளிகள் சிலரிடம் வன்னியர் மைப்புகள் ‘முதல்வரின் அப்பாயின்ட்மெண்டை வாங்கி தாங்க!’என்று கேட்டுள்ளனர். 

அதற்கு ‘நாங்க நிச்சயம் வாங்கி தர்றோம். ஆனா வெறும் பாராட்டு விழா மட்டும் போதுமா? கருணாநிதி செய்யாததை, ஏன் அம்மாவே யோசிக்காததை தலைவர் எடப்பாடியார் செஞ்சு கொடுத்திருக்கிறார். அதுக்கு நன்றிக்கடனை தேர்தல்ல காட்டணும் நீங்க. அதுதான் உண்மையான விசுவாசம். செய்வீங்களா?’ என்றதும், அவர்களோ நிச்சயமாக செய்வதாக உத்தரவாதம் கொடுத்தனராம். ஆனாலும் அ.தி.மு.க. புள்ளிகள் யோசிக்க, சில நிர்வாகிகளோ சட்டென்று கற்பூரத்தை எடுத்து வர சொல்லி அதில் அடித்து ‘சத்தியமா எங்க சங்கங்களை சேர்ந்தவர்கள், அவங்களோட குடும்பங்கள், பங்காளிகள்ன்னு எல்லார் ஓட்டும் தலைவர் எடப்பாடியாருக்குதான். கேட்டதும் கொடுத்த வள்ளளுங்க அவரு. ’ என்று சொல்ல, ஆளும் தரப்புக்கோ செம குஷி. 

இந்த விழாவுக்கு வன்னியர் சங்கங்களை விட அ.தி.மு.க.தான் வரிந்து கட்டிக் கொண்டு தயாராகிறது. வன்னியர் சமுதாய வாக்கு வங்கியை சுற்றி நடக்கும் இந்த நிகழ்வுகளை பார்த்து டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் பேரதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டார்களாம். இதனால் காடுவெட்டி குருவின் பெயரை மீண்டும் கையிலெடுத்துவிட்ட ராமதாஸ், அவரது பெயரை திரும்பத் திரும்ப சொல்லி வன்னியர் சமுதாயத்தின் லட்சோப லட்சம் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயது நபர்களின் வாக்குகளை தக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். 

கூடவே வன்னியர் அமைப்புகள், தேர்தல் காலங்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கலாம் எனும் நிலையில் பா.ம.க. மெதுவாக தி.மு.க.வுக்கு நட்பு ஸ்மைலி போட துவங்கியுள்ளது. ‘வன்னியர் சமுதாயத்துக்கு கருணாநிதி நிறைய செய்திருக்கிறார். அதற்கு அடித்தளம் மருத்துவர் ராமதாஸ் ஐயாதான்.’ என்று சொல்லி வாக்குகளை தக்க வைக்கும் வேலையும் துவங்கிவிட்டது. ஆக தேர்தல் நேரத்தில் வடமாவட்டத்தில் செம்ம அரசியல் சீன்ஸ் இருக்குது!