சீதா பாட்டி, ராதாப்பாட்டி ! மாமூல்.... மந்திரி.... மாமியார் வீடு! என்ற பெயரில் ராமதாஸ் எழுதிய உரையாடல் சமூக வலைதளங்களில் வைரளாகி வருகிறது.
சீதா பாட்டி: என்னடி ராதா..... உன் முகம் இஞ்சி தின்ற குரங்கு மாதிரி இருக்கு?
ராதா பாட்டி: அக்கா ஓவரா நக்கல் பண்ணாதீங்க அக்கா. இந்த வசனத்தை நம்ம முதலமைச்சரை பார்த்து சொன்னாலாவது சரியா இருக்கும்.
சீதா பாட்டி: அட ஏன்டி நீ அந்த மனுஷன வம்புக்கு இழுக்கிற?
ராதா பாட்டி: அட.... நான் வம்புக்கு இழுக்கவில்லை அக்கா. குட்கா புகழ் அமைச்சர் தான் வம்புக்கு இழுக்கிறாராம்.
சீதா பாட்டி: ஓஹோ... அப்படியா...? கொஞ்சம் விவரமா சொல்லேன்!
ராதா பாட்டி: தமிழக அமைச்சரவையில் முதல்வருக்கு அடுத்தப்படியா செல்வாக்குடன் இருப்பது இரு ‘மணி’ மந்திரிகள் தானாம். இவங்க பெயரிலேயே மணி இருப்பது ஒருபுறமிருக்க ‘துட்டு மணி’ விவகாரத்தையும் இவர்கள் தான் கவனித்துக் கொள்கிறார்களாம். இவர்கள் சொன்னால் அதை அப்படியே செய்து தருவாராம் முதலமைச்சர்.
சீதா பாட்டி: அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்?
ராதா பாட்டி: அந்த இரு மணி அமைச்சர்களும் சிபிஐ சோதனையை பயன்படுத்தி குட்கா மந்திரியை காலி செய்யத் துடிக்கிறார்களாம். அவர்கள் தான் முதலமைச்சரை சந்தித்து சி.பி.ஐ. சோதனையால் அரசுக்கு கெட்ட பெயர். எனவே அவரை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கினால் தான் உங்கள் பவர் மற்ற அமைச்சர்களுக்கும் தெரிய வரும் என்று தூபம் போட்டார்களாம்.
சீதா பாட்டி: அடக்கடவுளே.... குட்காவால் தான் அரசுக்கு கெட்ட பெயர் என்றால் அதற்கு முன் அரசுக்கு நல்ல பெயரா இருந்தது? இதையெல்லாம் கேட்கவே தலை சுத்துதே. சரி அதெல்லாம் இருக்கட்டும். சாமி என்ன சொன்னாராம்?
ராதா பாட்டி: தமது நிழலாக இருக்கும் மணிகள் சொல்வதை தட்ட முடியுமா? சோதனை முடிந்தவுடன் குட்கா அமைச்சரை அழைத்து பேசினாராம். ஆனால், அவரோ கொந்தளித்து விட்டாராம். முதலமைச்சரில் தொடங்கி எந்த மந்திரி தான் யோக்கியம் என்று முகத்துக்கு நேராகவே கேட்டதால் முதலமைச்சர் கொஞ்சம் ஆடித் தான் போனாராம்.
சீதா பாட்டி: அப்புறம் என்ன?
ராதா பாட்டி: மணி அமைச்சர்கள் தம்மை எப்படியாவது கவிழ்த்து விடுவார்கள் என்று அஞ்சிய குட்கா மந்திரி, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கொள்கைப்படி தர்ம யுத்தம் காரருடன் கூட்டணி அமைத்து விட்டாராம். அதுமட்டுமின்றி, தம்மை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க முயன்றால் தமக்கு ஆதரவாக உள்ள 5 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து அரசைக் கவிழ்க்கவும் தயாராகி விட்டாராம்.
சீதா பாட்டி: ஆஹா... அதிரடித் திருப்பம் தான். அடுத்தது என்ன?
ராதா பாட்டி: வேறென்ன சமாதானப் படலம் தான். குட்காவை நீக்கினால் தமது நாற்காலியும் ஆட்டம் கண்டு விடுமோ என்று அஞ்சிய பினாமி சாமி அந்த முடிவை கைவிட்டு விட்டாராம். அதுமட்டுமின்றி குட்காவை பதவி நீக்கத்தேவையில்லை என்று சில அமைச்சர்கள் மூலம் ஊடகங்களிடம் கூற வைத்தாராம். அதுமட்டுமின்றி குட்கா அமைச்சரையும் நேற்று நேரில் அழைத்து பேசி பதவியில் நீடிக்க சொல்லிவிட்டாராம்.
சீதா பாட்டி: குட்கா தற்காலிகமாக சமாதானம் ஆகியிருக்கிறாராம். ஆனாலும், மணி மந்திரிகள் மீது அவர் கோபமாக இருக்கிறாராம்.
ராதா பாட்டி: ஏனாம்?
சீதா பாட்டி: அது பழைய பகையாம். கடந்த ஆண்டு ஹவாலாக்காரர் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்ட போது குட்கா மந்திரி தான் வரவு செலவு கணக்குகளைப் பார்த்தாராம். அப்போதே அவரது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்தது. அதைத் தொடர்ந்து அவரை நீக்க வேண்டும் என்று இரு மணி அமைச்சர்களும் கொடி பிடித்தார்கள். ஆனால், அதை ஹவாலாக்காரர் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது ஏற்பட்ட மோதலின் காரணமாகத் தான் ஹவாலாக்காரர் வெளியேற்றப்பட்டாராம்.
ராதா பாட்டி: ஓ.... அப்ப சோதனை மட்டுமல்ல... மோதலும் தொடர்கிறது என்று சொல்லு. ஆனாலும், இப்போதும் குட்கா அமைச்சரை மணி மந்திரிகளால் நீக்க முடியாமல் போய்விட்டதே. அது அவர்களுக்கு தோல்வி இல்லையா?
சீதா பாட்டி: இல்லை என்கிறார்களாம் அவர்கள். காரணம் கேட்டால் குட்கா மந்திரி விரைவில் மாமியார் வீட்டுக்கே போகப் போகிறார். அது தங்களுக்கு இறுதி வெற்றியாக அமையும் என்கிறார்களாம்.
ராதா பாட்டி: ஏதோ நல்லது நடந்தால் சரி தான். உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? எப்போதும் நீ தான் கேள்வி கேட்பாய். நான் பதில் கூறுவேன். ஆனால், இன்று நான் கேள்வி கேட்டிருக்கிறேன். நீ பதில் சொல்லியிருக்கிறாய் சீதா. இப்பல்லாம் நீயும் துப்பறிவாளினி விட்டாய் சீதா.
சீதா பாட்டி: அப்ப.... ராதாவை விஞ்சிய சீதான்னு சொல்லுங்க அக்கா!
