இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் எத்தனை ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும், எத்தனை நீதிமன்றத் தீர்ப்புகள் வந்தாலும், எத்தனை ஆணையங்கள் அமைக்கப்பட்டாலும் அழிக்க முடியாத முள்மரமாக வளர்ந்து நிற்பது கல்விக் கட்டணக் கொள்ளை தான் என தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் வகையில் புதிய இணையதளத்தை அம்மாநில அரசு கடந்த 17ஆம் தேதி தொடங்கியிருக்கிறது. குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் கட்டணக் கொள்ளை பற்றி பெற்றோர் புகார் செய்யலாம்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறைசார் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது; இதனால் டெல்லி மாநிலத்தில் கல்விக் கட்டணக் கொள்ளை குறையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், டெல்லியை விட பல மடங்கு கல்வி கட்டணக்கொள்ளை தலைவிரித்தாடும் தமிழகத்தில் இத்தகைய ஏற்பாடு எதுவும் செய்யப்படாதது தான் மிகவும் வருத்தமளிக்கிறது.

டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதைப் போன்று, தமிழகத்திலும் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை உள்ளிட்ட விதிமீறல்கள் குறித்து புகார் செய்ய வசதியாக புதிய இணையதளம் தொடங்கப்பட வேண்டும். அதில் பதிவு செய்யப்படும் புகார் மீது 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதை செய்ய தவறும் அதிகாரிகளுக்கு துறை சார்ந்த தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.