ramadoss statement about 2G scam verdict

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்தது உண்மைதான்; ஆனால் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதுதான் தீர்ப்பின் பொருள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பளித்தார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகையே அதிரவைத்த 2ஜி ஊழல் வழக்கிலிருந்து திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தியாவின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனையின்றி விடுதலை செய்யப்படுவதும், தங்களைத் தாங்களே உத்தமர்களாக சித்தரித்துக் கொள்வதும் அதிர்ச்சியளிக்கிறது.

2ஜி ஊழல் வழக்கை 6 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரித்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஓ.பி.சைனி ஒரு வரி தீர்ப்பை மட்டுமே அளித்துள்ளார். முழுமையான தீர்ப்பாணை இன்னும் வெளியாகவில்லை. 2ஜி ஊழல் வழக்கில் 17 பேர் மீதான குற்றச்சாட்டுகளை ஐயத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் சிபிஐ மிக மோசமாகத் தோல்வியடைந்து விட்டதாகவும், ஐயத்தின் பலனை குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு வழங்கி விடுதலை செய்வதாகவும் நீதிபதி ஓ.பி. சைனி அவரது ஒரு வரித் தீர்ப்பில் கூறியிருக்கிறார். அதாவது இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்தது உண்மை, ஆனால், அந்த ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதுதான் தீர்ப்பில் பொருள் ஆகும்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காக 2007-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் உரிமம் பெறத் தகுதி உடையவை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென ஒரு நாளில் 2007-ம் ஆண்டு செப்.25 அன்று மாலை 3.30 மணியிலிருந்து 4.30 மணி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே உரிமம் பெற தகுதியுள்ளவை என்று அறிவிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் மட்டுமின்றி, உலக வரலாற்றில் கூட உரிமம் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, பின் தேதியிட்டு தகுதி காணும் நேரம் நிர்ணயிக்கப்பட்டதில்லை.

2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் வெளிப்படையான அணுகுமுறையை கடைபிடிக்கும்படியும், 2001-ம் ஆண்டில் விலையில் அலைக்கற்றை உரிமத் தொகையை நிர்ணயம் செய்யாமல் 2007-ம் ஆண்டு விலையில் உரிமத் தொகையை நிர்ணயிக்கும்படியும் ஆ.ராசாவுக்கு அப்போதையை பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதினார். அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காக ராசா கடைபிடிக்கும் அணுகுமுறை தவறானது என்று கூறி மத்திய நிதியமைச்சகமும் கடிதம் எழுதியது.

ஆனால், இதையெல்லாம் நிராகரித்து விட்டு, குறிப்பிட்ட நேரத்தில் உரிமம் கேட்டு விண்ணப்பித்த தமது ஊழல் கூட்டாளிகளுக்கு 122 உரிமங்களை மலிவு விலையில் வாரி வழங்கினார். பிரதமரின் அறிவுரையை மதிக்காமல் விதிகளை மீறி குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உரிமம் வழங்கியது ஊழல் இல்லையா?

ஆ.ராசாவுடன் கூட்டணி அமைத்து மலிவு விலையில் அலைக்கற்றையை வாங்கிய நிறுவனங்கள் அதைவிட பல மடங்கு அதிக விலை வைத்து விற்பனை செய்திருக்கின்றனர். உதாரணமாக ஸ்வான் தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.1537 கோடிக்கு வாங்கிய அலைக்கற்றையில் 45 விழுக்காட்டை சுமார் ரூ.4080 கோடிக்கு விற்பனை செய்தது. இது அரசு நிர்ணயித்த விலையை விட 590 விழுக்காடு அதிகமாகும். அதேபோல், தொலைத்தொடர்புத்துறையில் அனுபவமே இல்லாத யுனிடெக் நிறுவனம் 23 மண்டலங்களுக்கான உரிமங்களை ரூ.1651 கோடிக்கு வாங்கியது.

அவற்றில் 60 விழுக்காட்டை ரூ.11,620 கோடிக்கு விற்பனை செய்தது. இது அரசு நிர்ணயித்த விலையை விட 703% அதிகமாகும். இந்த கணக்குகளின் அடிப்படையில் பார்த்தால் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.44,100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை எவரும் மறுக்க முடியாது.

ஆனால், இந்த ஊழல் குறித்த சில ஆவணங்கள் விசாரணை அமைப்புக்கு கிடைக்காமல் தடுக்கப் பட்டதாலும், குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ அமைப்பு ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதாலும் தான் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இத்தீர்ப்பைப் பார்க்கும் போது திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்த நீதிபதி சர்க்காரியா கூறிய கருத்துக்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது. ஆனால், அதை நிரூபிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞான அடிப்படையில் ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அநீதியும், ஊழலும் இப்போது வென்றிருக்கிறது. ஆனால், எல்லா நாளும் வெல்ல முடியாது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் டெல்லி தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு, மத்திய புலனாய்வுப் பிரிவும் மேல்முறையீடு செய்து நீதியை நிலை நிறுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.