வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான காடுவெட்டி குரு உடல் நலக்குறைவால் கடந்த
25-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் இரவு உயிரிழந்தார். அதையடுத்து, காடுவெட்டி குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குருவிற்கு நடத்திய நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி , "ஜெ.குருவின் சொந்த ஊரான ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டியில் மணிமண்டபமும் அவரை அடக்கம் செய்த இடத்தில் நினைவிடமும் கோனேரிக்குப்பத்தில் தொடங்க உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளையின் சட்டக்கல்லூரிக்கு காடுவெட்டி குருவின் பெயர் வைக்கப்பட்டு நினைவுச்சிலை அமைக்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார்.

சட்டக்கல்லூரி வளாகத்திற்கு  ஜெ.குரு பெயர் சூட்டப்பட்டதுடன், அவரது திருவுருவச் சிலையும் கடந்த 16.09.2018 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக குரு வாழ்ந்த காடுவெட்டி  கிராமத்தில் அவரது நினைவு மணிமண்டபம் அமைக்கப்படவுள்ளது. காடுவெட்டி கிராம மக்கள் கூடிப் பேசி ஒருமனதாக எடுத்த முடிவின் அடிப்படையில்,  கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (எண் 36)  அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் காடுவெட்டி கிராமத்தில் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளை நிலத்தில்  ஜெ.குருவின் நினைவு மணிமண்டபம் சிறப்பாக கட்டியெழுப்பப்பட உள்ளது.

இந்நிலையில்,  காடுவெட்டி.குருவிற்கு மணிமண்டபம் கட்டும் பணியை அவரது சொந்த ஊரான காடுவெட்டி கிராமத்தில் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். இந்த  அடிக்கல் நாட்டுவிழா மணிமண்டபம் அமைக்கப்படவுள்ள நிலத்தில் இன்று காலை 10.30 மணிக்கு  தொடங்கியது. இந்த விழாவில் பாமக நிர்வாகிகளும் வன்னியர் சங்கத்தினரும் கலந்துகொண்டனர்.