தமிழகத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் லீ குவான் யூவைவிட சிறந்த ஆட்சியைத் தருவார். அவரைவிட சிறந்த ஆட்சியை தமிழகத்திலும் யாராலும் தர முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 
பாமக தொடங்கப்பட்டு 32-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி அக்கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். “பாமக தொடங்கி 32வது ஆண்டு தொடங்கி விட்டது. ஆனால், நாம் இன்னும் இலக்கை அடையவில்லை. அந்த இலக்கை அடைய அனைவரும் தீவிரமாக பங்காற்றத் தொடங்கும் நேரத்தில்தான் கொரோனா வைரஸ் வந்து நம் பணிகளைத் தடுத்து விட்டது. கொரோனா வைரஸுக்குப் பிறகு 10 மடங்கு வேகத்தில் நீங்கள் பணியாற்றுவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
நம்மை அழிக்க சண்டாளர்கள், சதிகாரர்கள் தொடக்கத்திலிருந்தே சதி செய்து வருகிறார்கள். அந்தக் காலத்திலிருந்தே அவர்களை நான் பார்த்து வருகிறேன். அந்தச் சண்டாளர்கள், சதிகாரர்கள் வெவ்வேறு வடிவில் வருகிறார்கள். விஷப் பாம்புகளாக வருகிறார்கள். நம்முடன் பழகி, நம் கொள்கைகளையே பேசி, நம்மை அழிக்கப் பார்க்கிறார்கள். அவர்களால் எதுவும் முடியாது. பா.ம.க.வின் வளர்ச்சி என்பது எளிதாக கிடைத்துவிடவில்லை. ரத்தத்தை சிந்திதான் கட்சியை வளர்த்துள்ளோம். தமிழ் நாட்டில் மக்கள் நலனுக்காக பாடுபடும் கட்சி பாமகதான். இட ஒதுக்கீடு என்ற பெயரில் ஆட்சியில் இருந்தவர்கள் நடுவில் இருந்த நல்ல துண்டுகளை எல்லாம் எடுத்துக்கொண்டுவிட்டார்கள். ஓரத்தில் இருந்ததைதான் மற்றவர்களுக்கு ஒதுக்கி விட்டார்கள். இந்த விஷயத்தில் நமக்கெல்லாம் தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு வரை பல்வேறு துரோகங்கள் நமக்கு இழைக்கப்படுகின்றன.
20 வயதில் மன்னராக பொறுப்பேற்ற மாவீரன் அலெக்சாண்டர் 32 வயதிற்குள், 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக போர் நடத்தி இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்தான் வரை அனைத்து நாடுகளையும் வென்றான். 32 வயதில் உலகத்தையே அலெக்சாண்டர் வென்றார் என்பது வரலாறு. இதிலிருந்து நான் கற்றுகொள்ள வேண்டியது முன்னேறு... முன்னேறு... இலக்கை அடை.... இலக்கை அடை என்பதே. அலெக்சாண்டர் 32 ஆண்டுகளில் உலகை வென்றார். நாம் கட்சி தொடங்கி 31 ஆண்டுகள் ஆகின்றன. அதனால் இலக்கை அடைய வேகமாக உழைப்போம்.
நாம் மக்களுக்கு நேரடியாக நன்மை செய்ய வேண்டாமா? மக்களுக்காக என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது தெரியும். அதை செய்ய நாம் ஆட்சிக்கு வர வேண்டும். சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ குடிசைகளாக இருந்த சிங்கப்பூரை நவீன சிங்கப்பூராக மாற்றினார். தமிழகத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் லீ குவான் யூவைவிட சிறந்த ஆட்சியைத் தருவார். அவரைவிட சிறந்த ஆட்சியை தமிழகத்திலும் யாராலும் தர முடியாது.

 
தமிழகத்தில் ஒரு கட்சித் தலைவர் உள்ளார். எப்படியாவது கோட்டைக்குள் ஓடிச் சென்றாவது முதல்வர் நாற்காலியில் அமர துடிக்கிறார். எனக்கு ஒரே ஒரு ஆசை. அவரையும் அன்புமணி ராமதாசையும் ஒரே மேடையில் ஏதேனும் ஒரு பொருளில் விவாதம் செய்ய வைக்க வேண்டும். அதற்கு ஊடகங்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டும். பலமுறை அழைத்தும் அந்த தலைவர் விவாதத்துக்கு தயாராக இல்லை.” என்று ராமதாஸ் தெரிவித்தார்.