வரும் 27ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதிமுக பாஜக இடையே மோதல் போக்கு நீடிக்கும் நிலையில் பாமகவும் போர்க்கொடி தூக்கி இருப்பது கூட்டணியில் விரிசலை அதிகரித்துள்ளது. 

தமிழக சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் வியூகம் உள்ளிட்ட பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறது. அந்த வகையில் அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

வரும் 27ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கும் பிரச்சார கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் அனைவரையும் மேடை ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளதால்  ராமதாசும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதனை ஏற்க ராமதாஸ் மறுத்துவிட்டதாகவும், டிசம்பர் 31ம் தேதி நடைபெற உள்ள பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பு தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. 

கடந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போதே அரசு விழா என்று பாராமல் பாஜகவுடன் கூட்டணி தொடருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், கூட்டணி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடாமல் பாஜக மௌனம் காத்து வருகிறது. அதேநேரத்தில் தமிழக அரசை பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ரஜினி கட்சி தொடங்கிய பிறகு கூட்டணி குறித்து இறுதி முடிவை அறிவிக்கலாம் என்று பாஜக மேலிடம் கருதுவதே இதற்கு காரணம். அதே மனநிலையில் பாமகவும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே விஜயகாந்தின் தேமுதிகவும் தங்களுக்கு 40 இடங்களுக்கு மேல் ஒதுக்கும் கட்சிகளுடன் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளது. இதனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலை போல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக கட்சிகள் தொடருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.