அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்!! ராமதாஸ் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்

ramadoss questions on anna university vice chancellor appointment
ramadoss questions on anna university vice chancellor appointment


அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் தமிழரை துணைவேந்தராக நியமிக்க முடியுமா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் முதன்மை பல்கலைக்கழகமும், தேசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ள நிறுவனமுமான அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்து ஆளுநர் ஆணையிட்டுள்ளார். அவரை நியமிக்கக்கூடாது என பாமக வலியுறுத்தியிருந்த நிலையில், அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்நியமனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது, திரும்பப்பெறப்பட வேண்டியதாகும்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மிகப்பெரிய மோசடியாகும். துணைவேந்தர் பதவிக்கு வியாழக்கிழமை நேர்காணல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், புதன்கிழமையே புதிய துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்படுவதாக செய்திகள் வெளியாயின. சூரப்பாவும் தமக்கு நெருக்கமானவர்களிடம் இதை உறுதிப்படுத்தியுள்ளார். துணைவேந்தர் பதவிக்கு தேர்வுக்குழு பரிந்துரைக்கும் 3 பேர் பட்டியலில் உள்ளவர்களிடம் ஆளுநர் நேர்காணல் நடத்தி, அதன் அடிப்படையில் தான் துணைவேந்தரை தேர்வு செய்வதாக ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தகுதி அடிப்படையில் தான் புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டார் என்றால் நேர்காணலுக்கு முன்பாகவே சூரப்பா தான் துணைவேந்தர் என்று செய்தி பரவியது எப்படி? ஒருவேளை இது யூகம் என்றால் கூட சூரப்பாவே இதை உறுதி செய்தது எப்படி?

கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிக்கக் கூடாது என்று பாமக வலியுறுத்தியிருந்தது. இதை ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு மட்டுமின்றி, அவரது துதி பாடும் வகையில் அவரைப் பற்றியக் குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. சூரப்பா நியமனம் தவறு என்பதை ஆளுநர் மாளிகை உணர்ந்திருந்ததால் தான் இவ்வாறு செய்யப்பட்டது. தனிமனித துதி பாடுவது ஆளுநர் மாளிகையின் பணி அல்ல, இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதைப் போன்று சூரப்பா மெச்சத்தக்க நிர்வாகியோ, கல்வியாளரோ அல்ல. வழக்கமாக இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்படுவோருக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்ட சூரப்பாவை அந்த பதவியில் தொடரத் தகுதியற்றவர் என்று கூறி அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது.

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குனராக பணியாற்றியபோது பெரும்பாலான நாட்களில் பணிக்கு வராதது, 2. நிர்வாகம் சார்ந்த முடிவுகளை விரைந்து எடுக்காதது, 3. பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.760 கோடி ஒதுக்கப்பட்ட போதிலும், 5 ஆண்டுகளாக அதைப் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டது. இதனால் கட்டுமான செலவு மதிப்பீடு ரூ.1,958 கோடியாக உயரக் காரணமாக இருந்ததாக இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் கண்டனத்திற்கு ஆளானது, 6. பிற ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை தமது கண்டுபிடிப்பாக காட்டியது, 7. பேராசிரியர்களை மரியாதைக் குறைவாக நடத்தியது என இவர் மீது ஏராளமான புகார்கள் உள்ளன.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தமிழரல்லாத ஒருவரை தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஒருவர் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட வேண்டுமானால் அவருக்கு அடிப்படைத் தமிழ் மொழியறிவு இருக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. உதவிப் பேராசியருக்கே இந்த நிலை எனும் போது தமிழே தெரியாதவரை துணைவேந்தராக நியமிப்பது எந்த வகையில் நியாயம்?

தமிழகத்தில் தலைசிறந்த கல்வியாளர்கள் ஏராளமாக இருக்கும் போது இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவரை இறக்குமதி செய்து துணைவேந்தராக நியமிப்பதை எப்படி ஏற்க முடியும். இசை பல்கலைக்கழகத்திற்கு கேரளப் பெண்மணி, சட்டப் பல்கலைக்கழகத்திற்கு ஆந்திராக்காரர், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கன்னடக்காரர் என்று இறக்குமதி செய்வது தமிழ்நாட்டிலுள்ள கல்வியாளர்களை அவமானப்படுத்தும் செயலன்றி வேறு இல்லை.

இத்தகைய அவமதிப்புகளும், அத்துமீறல்களும் தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காது. தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் இத்தகைய செயல்களை ஒருபோதும் நிலை நிறுத்த முடியாது. ஒருவேளை இதுதான் தேசப்பற்று என்று தமிழக ஆளுநர் கருதுவாரேயானால், சூரப்பாவை விட திறமையும், தகுதியும் அதிகமாக உள்ள 25 பேராசிரியர்கள் பட்டியலை ஆளுநரிடம் பாமக ஒப்படைக்கத் தயார்.

அவர்களில் ஒருவருக்காவது கர்நாடகத்தில் உள்ள சாதாரணமான பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பதவி வாங்கித் தர தமிழக ஆளுனர் தயாரா? ஒருவேளை அது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று ஆளுநர் கருதினால், மத்திய அரசிடம் பேசி கர்நாடகத்திலுள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு பேராசிரியர் ஒருவரை துணைவேந்தராக நியமிக்கும் திறன் தமிழக ஆளுநருக்கு உண்டா?

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், சென்னை கடல்சார் பல்கலைக்கழகம் ஆகிய மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக நீண்டகாலமாகவே தமிழர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. இப்பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்தால் கூட அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

தமிழனுக்கு எதிராக இவ்வளவு துரோகங்கள் இழைக்கப்படும் நிலையில், தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஒருவர்பின் ஒருவராக அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களை நியமிப்பது தமிழர்களின் தன்மானம் மற்றும் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகும். இவற்றையெல்லாம் பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக எடப்பாடியும், பன்னீர்செல்வமும் வேண்டுமானால் சகித்துக் கொள்ளலாம். மக்கள் சகிக்க மாட்டார்கள்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதை தமிழக ஆளுநர் ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய மறுத்தால் அவருக்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்கக் கூடாது. இந்த அநீதிக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும். சூரப்பா கர்நாடகத்துக்கு திருப்பி அனுப்பப்படவில்லையென்றால் பாமக மாணவர்களைத் திரட்டி போராடும் என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios