Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி அரசாங்கம் தான் சூப்பர்... இந்தியாவுக்கே இவங்க தான் வழிகாட்டியா வருவாங்க... மானாவாரியா புகழ்ந்து தள்ளும் ராமதாஸ்...

பா.ம.க. ஏற்கனவே வலியுறுத்தி வருவதை ஏற்று, தமிழக சட்டப்பேரவையில் காலநிலை நெருக்கடி நிலை பிரகடனத்தை வெளியிட்டு நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் புவியைக் காப்பதில் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடியாக திகழ வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

ramadoss Praised edappadi palanisamy govt
Author
Chennai, First Published Aug 27, 2019, 11:51 AM IST

பா.ம.க. ஏற்கனவே வலியுறுத்தி வருவதை ஏற்று, தமிழக சட்டப்பேரவையில் காலநிலை நெருக்கடி நிலை பிரகடனத்தை வெளியிட்டு நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் புவியைக் காப்பதில் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடியாக திகழ வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரலாற்றில் முதன்முறையாக சென்னையில் மின்கல பேருந்து சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்திருக்கிறார். சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும், அதன் வழியாக புவிவெப்பமயமாதலுக்கும் வாகனங்கள் கணிசமாக பங்களிப்பதாக எச்சரிக்கை குரல்கள் எழுந்துள்ள நிலையில், தமிழக அரசின் இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் புவிவெப்பமயமாதல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சி வழங்கி வருகிறது. காலநிலை நெருக்கடியை சமாளிப்பதற்காக சென்னையில் செயல்படுத்தப்பட வேண்டிய 20 அம்சத் திட்டத்தையும் பா.ம.க. மக்கள் மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அவற்றில் முதல் மூன்று முக்கிய யோசனைகளாக கூறப்பட்டிருந்தவை போக்குவரத்தில் புகைக்கரியை ஒழிக்க வேண்டும்; நகர்ப்புற சாலைகளை புழுதியற்றதாக மாற்ற வேண்டும்; மின்கல வாகனங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பவை தான். இந்த 3 யோசனைகளுக்கும் செயலாக்கம் கொடுக்கும் வகையில் சென்னையில் சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலிருந்து திருவான்மியூர் வரையிலான வழித்தடத்தில் இயங்கும் மின்கல பேருந்து போக்குவரத்தை அரசு இன்று தொடங்கியுள்ளது.

ramadoss Praised edappadi palanisamy govt

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் மின்கல பேருந்தான இது காலையில் 2 முறையும், மாலையில் 2 முறையும் சோதனை முறையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய மாநகரங்களில் மொத்தம் 625 மின்கல பேருந்துகளை முதல்கட்டமாக இயக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சி-40 என்ற நிறுவனம் தமிழகத்தில் மின்கல பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதில் உதவி செய்கிறது.

டீசலை எரிபொருளாகக் கொண்டு செயல்படும் பேருந்துகள் புகைக்கரியை அதிகமாக வெளியிடுவதால், வளிமண்டலத்தில் சேரும் கரியமில வாயு தான் புவி வெப்பநிலை அதிகரிப்பதற்கு காரணமாக அமைகிறது. புகைக்கரி வெளியிடும் பேருந்துகளுக்கு மாற்றாக மின்கல பேருந்துகளை முழு அளவில் இயக்கத் தொடங்கும் போது புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த இயலும். சென்னையில் முதல்கட்டமாக ஒரே ஒரு மின்கல பேருந்து இயக்கப்படும் நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

சென்னையில் தற்போது 3,679 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தலைநகரில் தனிநபர் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி, பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க, இந்த எண்ணிக்கை போதுமானதல்ல என்பதால் சென்னை நகரில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை 8,000-ஆக உயர்த்த வேண்டும். அவற்றில் பெரும்பாலானவற்றை மின்கல பேருந்துகளாகவும், மற்றவையை புகைக்கரி வெளியிடாத நவீன பேருந்துகளாகவும் மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ramadoss Praised edappadi palanisamy govt

பா.ம.க.வின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சென்னையில் அதிவிரைவு போக்குவரத்து முறையை ( Bus Rapid Transit )அறிமுகம் செய்வது குறித்த கருத்துக்கேட்புக் கூட்டங்களை தமிழக அரசு நடத்தி முடித்துள்ளது. அதன்தொடர்ச்சியாக சென்னையில் அதிவிரைவு போக்குவரத்து முறையை வெகுவிரைவில் தொடங்க வேண்டும். சென்னை பெருநகரில் போக்குவரத்து சமிக்ஞைகளை நவீனமாக்கும் (Smart signals) திட்டத்தையும், மோட்டார் வாகனமில்லா போக்குவரத்து கொள்கை (Chennai Non-Motorised Transport Policy -2014) அடிப்படையில் நடைபாதைகளையும் மிதிவண்டி பாதைகளையும் மேலைநாடுகளுக்கு இணையாக மேம்படுத்தும் திட்டங்களையும் அரசு விரைவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும் பெருமளவில் உதவும். எனவே, அவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும். அத்துடன், பா.ம.க. ஏற்கனவே வலியுறுத்தி வருவதை ஏற்று, தமிழக சட்டப்பேரவையில் காலநிலை நெருக்கடி நிலை பிரகடனத்தை வெளியிட்டு நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் புவியைக் காப்பதில் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடியாக திகழ வேண்டும் என கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios