Asianet News TamilAsianet News Tamil

தீராத அரசியல் நெருக்கடி... தலைசுற்ற வைக்கும் பின்னணி, நோக்கம் தான் என்ன? தோட்டத்திலிருந்தே கர்நாடகாவுக்கு பஞ்சாயத்து பண்ணும் ராமதாஸ்!!

கர்நாடகத்தில் நடைபெற்று வரும் அரசியல் சித்து விளையாட்டுகள் தலைசுற்ற வைக்கின்றன. ஆளும் காங்கிரஸ் & மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணியைச் சேர்ந்த 13 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி இன்னும் தீரவில்லை. இதன் பின்னணி என்ன? என்பதும், நோக்கம் என்ன? என்பதும் ஒருபுறம் இருக்க, இத்தகைய அரசியல் விளையாட்டுகள் ஜனநாயகத்திற்கு எந்த வகையிலும் வலிமை சேர்க்காது என்பதே உண்மை என ராமதாஸ் கூறியுள்ளார்.
 

Ramadoss Judges for Karnataka political
Author
Chennai, First Published Jul 15, 2019, 4:27 PM IST

கர்நாடகத்தில் நடைபெற்று வரும் அரசியல் சித்து விளையாட்டுகள் தலைசுற்ற வைக்கின்றன. ஆளும் காங்கிரஸ் & மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணியைச் சேர்ந்த 13 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி இன்னும் தீரவில்லை. இதன் பின்னணி என்ன? என்பதும், நோக்கம் என்ன? என்பதும் ஒருபுறம் இருக்க, இத்தகைய அரசியல் விளையாட்டுகள் ஜனநாயகத்திற்கு எந்த வகையிலும் வலிமை சேர்க்காது என்பதே உண்மை என ராமதாஸ் கூறியுள்ளார்.

தைலாபுரம் தோட்டத்திலிருந்துகொண்டே கர்நாடக அரசியலில் போடப்பட்ட குழப்பமான முடிச்சுகளை சாதூர்யமாக அவிஸ்க்கை ஐடியா கொடுத்துள்ளார் ராமாதாஸ். அதில்; ஒரு நாட்டின் ஜனநாயகம் எந்த வகையிலும் வளைக்க முடியாமலும், சிதைக்க முடியாமலும் இருந்தால் மட்டும் தான் அங்கு ஆரோக்கியமான அரசியல் நிலவுவதை உறுதி செய்ய முடியும். கர்நாடகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது, அங்கு ஆரோக்கியமான அரசியல் நிலவவில்லை என்பதை உறுதி செய்ய முடியும். சட்டப்பேரவைத் தேர்தலில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து சட்டப் பேரவை உறுப்பினரான எவர் ஒருவரும், அந்த பதவியிலிருந்து விலகத் துணிய மாட்டார்கள்.

Ramadoss Judges for Karnataka political

ஆனால், சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு மட்டுமே ஆகும் நிலையில், 13 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுகிறார்கள் என்றால், அதன் பின்னணியில் அவர்களுக்கு எதோ பெரிய லாபம் இருப்பதாகத் தான் பொருளாகும். அந்த லாபம் எது? என்பது கர்நாடக அரசியலை கூர்ந்து கவனிக்கும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அந்த சர்ச்சைகளுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. அதற்கு அவசியமுமில்லை.

எனது கவலை எல்லாம் ஆரோக்கியமான அரசியலை உறுதி செய்யும் வகையில் இத்தகைய தாவல்களை தடுக்க முடியாதா? என்பது தான். கட்சித் தாவலை தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த சட்டம் இப்போது கேலிக் கூத்தாக்கப்பட்டு உள்ளது. அச்சட்டத்தின்படி மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் அணி மாறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதைப் பயன்படுத்தி தான் கோவாவில் 10 காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு அணி மாறினார்கள். கர்நாடகத்தில் அணி மாறும் உறுப்பினர்களுக்கு அந்த அளவுக்கு வலிமை இல்லாததால் தான், அவர்கள் பதவி விலகி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயனடையப் போவது யார்? என்பது அனைவரும் அறிந்ததே.

Ramadoss Judges for Karnataka political

கட்சித் தாவல் தடை சட்டத்தால் பயன் இல்லை என்பது தெளிவாகி விட்ட நிலையில், அடுத்தக்கட்ட தீர்வு என்ன? என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதைப் போலத் தான், நாமும் இந்த சிக்கலுக்கு அற்புதமான தீர்வு இருக்கும் போது, அதைப் பயன்படுத்தாமல், பயனில்லாத தீர்வுகளை தேடிக் கொண்டிருக்கிறோம். கட்சித் தாவல்கள், வாக்களித்த மக்களுக்கு பிரதிநிதிகள் கிடைக்காதது உள்ளிட்ட அனைத்துத் தீர்வுகளுக்கு ஒரே தீர்வு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்வது மட்டும் தான். அது ஒரு அரசியல் அருமருந்து.

Ramadoss Judges for Karnataka political

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்படும் போது, கட்சி தான் முன்னிறுத்தப்படுமே தவிர தனிநபர்கள் முன்னிறுத்தப்பட மாட்டார்கள். தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிக்கும் உறுப்பினர் எண்ணிக்கை ஒதுக்கப்படும். அதற்கேற்ற வகையில், ஒவ்வொரு கட்சி சார்பிலும் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்த முறையில் ஒருவர் கட்சித் தாவினாலோ அல்லது உயிரிழந்து விட்டாலோ, அவருக்கு பதிலாக பட்டியலில் அடுத்த வரிசையில் உள்ளவர் சட்டமன்ற  நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்பதால் கட்சித் தாவலுக்கோ, இடைத்தேர்தலுக்கோ வாய்ப்பு இருக்காது. அதுமட்டுமின்றி, இந்த முறையில் வாக்களிக்கும் அனைத்து மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவமும் கிடைக்கும் என்பதால் இது தான் இந்தியாவுக்கு உண்மையான ஜனநாயகமாக இருக்கும்.

இந்தியாவைச் சுற்றியுள்ள இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 87 நாடுகளில் இம்முறை தான் கடைபிடிக்கப் படுகிறது. இந்தியா போன்ற பலகட்சி அரசியல் முறை உள்ள நாடுகளுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். இதன் மூலம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். எனவே, இந்தியாவிலும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை நடைமுறை படுத்துவது குறித்த விவாதத்தை தொடங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios