மக்களவை தேர்தல் முடிந்த பிறகு வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சட்டபேரவையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டதை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

இந்நிலையில் அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் ராமதாஸ். அதில், ‘’காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும், நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டமும் புதிதாக அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. புதிய மாவட்டங்களை உருவாக்க ஆணையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி.

தமிழகத்தில் மிக அதிகமாக 13 சட்டப்பேரவைகளைக் கொண்ட மாவட்டம் வேலூர் தான். அந்த மாவட்டம் வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட வேண்டும். இடைத்தேர்தல் முடிவடைந்து நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தபின் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.

சிறிய மாவட்டங்கள் தான் மிகவும் அழகானவை. நிர்வாக வசதிக்கு ஏற்றவை. எனவே, 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் தமிழகத்தின் பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.