Asianet News TamilAsianet News Tamil

மக்கள்தொகைப்படி தொகுதிகளை அதிகரிக்கலாம்... எப்படி தெரியுமா? மத்திய அரசுக்கே ஐடியா கொடுக்கும் ராமதாஸ்!

இந்தியாவின் தேர்தல் முறையில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும் நிலையில், அவற்றில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள்தொகைக்கு ஏற்றவாறு அதிகரிப்பது தான் முதன்மையான சீர்திருத்தம் ஆகும். மக்களின் தேவைகள் அனைத்தையும் அவர்களின் பிரதிநிதிகள் அறிந்து, அவற்றை நிறைவேற்ற இந்த சீர்திருத்தம் மிகவும் அவசியமாகும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
 

Ramadoss Given idea to central govt
Author
Chennai, First Published Jul 6, 2019, 6:08 PM IST

இந்தியாவின் தேர்தல் முறையில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும் நிலையில், அவற்றில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள்தொகைக்கு ஏற்றவாறு அதிகரிப்பது தான் முதன்மையான சீர்திருத்தம் ஆகும். மக்களின் தேவைகள் அனைத்தையும் அவர்களின் பிரதிநிதிகள் அறிந்து, அவற்றை நிறைவேற்ற இந்த சீர்திருத்தம் மிகவும் அவசியமாகும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘சிறியதே அழகு’ என்ற தத்துவம் மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் மட்டுமின்றி மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அவசியமாகும். தொகுதிகள் சிறியதாக இருந்தால் மட்டுமே அவர்களால் வாக்காளர்கள் அனைவரையும் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்ற முடியும். அதற்காக நாட்டின் மக்கள்தொகை அதிகரிக்கும் போது, அதற்கு இணையாக தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். ஆனால், அதை செய்யத் தவறியதன் விளைவாக மக்களவை - சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை அவர்களுக்கு சேவை செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இது பலவகைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தமிழகத்திலுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 85 தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை இரண்டரை லட்சம் முதல் 3 லட்சம் வரையாகும். 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளின் எண்ணிக்கை 18 ஆகும். 5 தொகுதிகளில் 4 லட்சத்திற்கும் அதிகமாகவும், சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியின் வாக்காளர்கள் 6 லட்சத்திற்கும் அதிகமாகும். இவ்வளவு அதிக மக்களுக்கு ஒரு சட்டப்பேரவை உறுப்பினரால் சேவை செய்வது மிகவும் கடினமானது ஆகும்.

தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.99 கோடி ஆகும். ஒவ்வொரு பேரவைத் தொகுதியின் சராசரி வாக்காளர் எண்ணிக்கை 2,55,853 ஆகும். இந்தியாவில் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை கடைசியாக மாற்றப்பட்ட 1967-ஆம் ஆண்டில் இது 88,886 ஆக இருந்தது. அதன்பின் ஒவ்வொரு தொகுதியின் சராசரி வாக்காளர் எண்ணிக்கையும் சுமார் 3 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அவற்றைப் பிரித்து புதிய தொகுதிகளை உருவாக்காமல் அப்படியே வைத்திருப்பது தான் பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது. வளர்ச்சிப் பணிகள் தடைபடுவதற்கும் இது தான் காரணமாகும்.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் மக்கள்தொகைக்கு ஏற்ப மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கமாக நடைபெற்று வந்தது. ஆனால், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட இருந்த நிலையில், நெருக்கடி நிலையின் போது 1976-ஆம் ஆண்டு செய்யப்பட்ட 42-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தில், 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறைவடையும் வரை மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்ற தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2001-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 84-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி இந்த தடை 2026-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்கள் எண்ணிக்கை பெருகியதற்கு மிக முக்கிய காரணமாகும்.

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக்கூடாது என்று 1976-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட முடிவுக்கு நியாயமான காரணங்கள் இருந்தன. அப்போது இந்தியாவின் மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வந்தது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் அது மக்கள்தொகை பெருக்கத்தை ஊக்குவிக்கும் என்பதால் தான் தொகுதிகளை அதிகரிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், இன்று நாட்டில் மக்கள்தொகைப் பெருக்கம் கிட்டத்தட்ட கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. மக்களிடமும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான தடையை மேலும் நீட்டிக்காமல், 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி புதிய தொகுதிகளை உருவாக்குவதே சரியாக இருக்கும்.

தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இரு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் முதல்குடிமகனாக இருந்த பிரணாப் முகர்ஜியே 08.04.2017 அன்று தில்லியில் நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தம் குறித்த கருத்தரங்கில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் கூறினார். அவரது கருத்துக்கு செயல்வடிவம் தர வேண்டும் என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடும் ஆகும்.

இந்தியா கடைபிடிக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை உருவாக்கிக் கொடுத்த இங்கிலாந்தில் இன்னும் மக்கள்தொகைக்கு ஏற்றவகையில் மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 13 தேர்தல்களில் 25 தொகுதிகள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் ஒரு மக்களவைத் தொகுதியின் சராசரி வாக்காளர் எண்ணிக்கை 70,997 மட்டும் தான். ஆனால், இந்தியாவில் மக்களவை தொகுதியின் சராசரி வாக்காளர் எண்ணிக்கை 16.57 லட்சம் ஆகும். இது இங்கிலாந்தை விட 20 மடங்கு அதிகம் ஆகும். இங்கிலாந்தில் ஒரு தொகுதியின் அதிகபட்ச வாக்காளர் எண்ணிக்கை 90 ஆயிரம் மட்டும் தான். ஆனால், இந்தியாவில் அதிகபட்ச வாக்காளர் எண்ணிக்கை 31.83 லட்சம் ஆகும். இது இங்கிலாந்தை விட 35 மடங்கு அதிகம் ஆகும். இவ்வளவு அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளை வைத்துக் கொண்டு அவர்களின் குறைகளை தீர்ப்பது சாத்தியமற்றதாகும்.

எனவே, 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும். சட்டப்பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சம் பேருக்கும், மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 12 லட்சம் வாக்காளர்களுக்கும் மிகாமல் இருப்பதை தொகுதி மறுவரையறை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios