உழவர்களின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் கூறி வருகின்றனர். ஆனால், அதற்கு பெரும் உதவியாக இருக்கும் திட்டத்திற்கு பல ஆண்டுகளாக முட்டுக்கட்டை போடப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது என ஷாக்காக கூறியுள்ளார் ராமதாஸ் .

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நிலம் வளமாக இருந்தால் தான் பயிர் செழிப்பாக வளரும். இந்தத் தத்துவத்தின்படி, தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியைப் பெருக்க, அனைத்து வருவாய் கிராமங்களிலும் விரிவான மண் வகையீடு செய்து, வேளாண்மைக்கு ஏற்ற நிலம் மற்றும் வேளாண்மைக்கு பயன்படாத நிலம் என பிரிக்கப்பட வேண்டும். வேளாண்மைக்கு பயன்படும் நிலங்களின் மண் வளத்தினை பாதுகாக்க அதன் பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் அளவை அறிந்து அதற்கேற்றவாறு உரமிட உழவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட வேண்டும். இந்த அறிவுரைகளை செயலிகள் மூலம் உழவர்களின் செல்பேசி வாயிலாகவே வழங்க முடியும். இதற்கு அதிக செலவும் பிடிக்காது. இதை பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் வலியுறுத்தி வருகிறது. இந்த யோசனைக்கு பாராட்டுகள் குவிந்த அளவுக்கு, செயலாக்கங்கள் நடைபெறவில்லை என்பது தான் மிகவும் வருத்தமளிக்கிறது.

இதற்காக முதன்முதலில் செய்யப்பட வேண்டிய பணி, முதலில் வேளாண்துறையின் ஆராய்ச்சிப்பிரிவிலும், பின்னர் விரிவாக்கப் பிரிவிலும் இயங்கி வரும் மண்வகையீடு மற்றும் நிலப்பயன்பாட்டு நிறுவனத்தை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஓர் துறையாக இணைப்பது தான். 1964-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு அடுத்த சில ஆண்டுகளில் பாளையங்கோட்டை தஞ்சாவூர், வேலூர் ஆகிய இடங்களில் தனிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. இதுவரை தமிழ்நாட்டில் 38 ஒன்றியங்களில் மண் வகையீடு செய்துள்ள இந்த நிறுவனம், சேலம் மாவட்டம், வாழப்பாடி, வீரபாண்டி மற்றும் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் ஆகிய மூன்று வட்டாரங்களில் மட்டுமே ஒவ்வொரு கிராமத்திலும் புல எண்கள் வாரியாக பயிரிட வேண்டிய பயிர்கள், அவற்றுக்கு இட வேண்டிய உரத்தின் அளவுகள் ஆகியவற்றை உழவர்களுக்கு தெரிவித்து வருகிறது. இந்த சேவையை நவீனமயமாக்கி, தமிழ்நாட்டின் அனைத்து பட்டிதொட்டிகளுக்கும் கொண்டு செல்வதே இன்றைய அவசியத் தேவையாகும்.

இதற்காக மண்வகையீட்டு நிறுவனத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற ஆலோசனை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. 2004-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின் போது முன்னாள் நிதித்துறை செயலாளர் ஏ.எம்.சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் செலவினங்கள் சீர்திருத்த ஆணையமும் இதே பரிந்துரையை வழங்கியிருந்தது. அதை செயல்படுத்துவதற்குள் அதிமுக ஆட்சிக்காலம் முடிவடைந்து விட்ட நிலையில், அடுத்து வந்த திமுக ஆட்சியில் இந்த பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்று அப்போதைய முதலமைச்சர் கலைஞருக்கு 04.09.2007, 09.01.2008 ஆகிய தேதிகளில் கடிதம் எழுதினேன். ஆனால், திமுக அரசோ, அந்த பரிந்துரைக்கு முற்றிலும் மாறான வகையில், வேளாண் பல்கலைக்கழகத்துடன் சேர்க்கப்பட வேண்டிய மண் வகையீட்டுப் பிரிவை, வேளாண்துறையின் நிர்வாகப்பிரிவான விரிவாக்கத் துறையுடன் கடந்த 2008-ஆம் ஆண்டு இணைத்தது. அந்நடவடிக்கை மிகப்பெரிய தவறாக அமைந்தது.

வேளாண் விரிவாக்கத்துறையுடன் மண்வகையீட்டுப் பிரிவு இணைக்கப்பட்டது முதல் இன்று வரையிலான 11 ஆண்டுகளில் மண்வகையீட்டுப் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை; அதைப்போலவே தமிழகத்தில் வேளாண்மை உற்பத்தித் திறனும் சொல்லிக்கொள்ளும் வகையில் அதிகரிக்கவில்லை. இதற்குக் காரணம் தமிழகத்திலுள்ள உழவர்களுக்கு அவர்களுக்கு சொந்தமான மண்ணின் தன்மை, அவற்றில் இடப்பட வேண்டிய உரங்கள் மற்றும் அவற்றின் அளவு குறித்து அறிவியல் முறையில் ஆலோசனை வழங்கப்படாதது தான். வெற்றிகரமான விவசாயத்திற்கு மண்வள ஆய்வு அவசியமாகும். தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் கூட, நாக்பூரில் அவருக்கு சொந்தமான நிலங்களில் மண்வள ஆய்வு செய்யாமல் ஆரஞ்சு பயிரிட்டு, ரூ.10 லட்சம் இழப்பு ஏற்பட்டதை அண்மையில் விழா ஒன்றில் தெரிவித்திருந்தார். அவரைப் போலவே தமிழக உழவர்களும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 22.30 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் முறையான மண்வள ஆலோசனை இல்லாமல் சீரழிந்து வருகின்றன. இவை உட்பட தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த விளைநிலங்களுக்கும் மண் வள ஆய்வு செய்து, அவற்றின் தன்மை என்ன? அந்த நிலங்களில் எத்தகைய பயிர்களை பயிரிடலாம்? என்னென்ன உரங்களை, எவ்வளவு இடலாம்? என்பன உள்ளிட்ட விவரங்களை அனைத்து உழவர்களுக்கும் செல்பேசி செயலி மூலம் வழங்குவற்காக கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஆனால், அந்தப் பணிக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள சில சக்திகள் முட்டுக்கட்டை போடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக செய்யப்படும் சதி ஆகும்.

இத்தகைய சதிகளை முறியடிப்பதுடன், அதற்கு காரணமானவர்களையும் கண்டுபிடித்து களையெடுக்க வேண்டும். மண்வகையீடு மற்றும் நிலப்பயன்பாடு பிரிவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைத்து, அதன் மூலம் மண்ணின் வளத்திற்கு ஏற்றவகையில் அதில் விவசாயம் செய்து உழவர்கள் அதிக லாபம் ஈட்டுவதையும், அவர்கள் வாழ்வு செழிப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.