ramadoss explained about his opinion on rajini political entry
ரஜினி அரசியல் கட்சி தொடங்க இருப்பது குறித்து, தான் கூறிய கருத்து ஊடகங்களில் திரித்து வெளியிட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள விதம் உண்மையாகவே கவலையளிக்கிறது.
ரஜினி அரசியல் கட்சி தொடங்க இருப்பது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு, இருகுடிமகன்கள் சேர்ந்து ஒரு கட்சி தொடங்க வேண்டும் என்று நினைத்தால் தொடங்கலாம் என கூறினேன். மீண்டும் அதே கேள்வியை வேறு பொருளில் கேட்டபோது, அதே பதிலை மீண்டும் கூறினேன். இதில் அழுத்தமாக கூறுவதற்கு எதுவும் இல்லை. அரசியல் கட்சி தொடங்க குறைந்தது இரண்டு பேர் வேண்டும் என்ற அர்த்தத்தில் நான் குறிப்பிட்டேன். சிட்டிசன்ஸ் என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையிலேயே நான் குடிமகன்கள் என கூறினேன். ஆனால், சில பத்திரிகைகளில் அதை தவறான பொருள்படும் வகையில் திரித்ததுடன், சிரித்தபடியே 2 குடிமகன்கள் என்ற வார்த்தையை அழுத்தமாக நான் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.
அதேபோல, பாமக-வால்தான் ரஜினி புகைபிடிப்பதை விட்டார் என்று நானாக கூறவில்லை. இதுதொடர்பாகவும் ரஜினி ஏற்கனவே சொல்லியதை சுட்டிக்காட்டியபோது தான், ரஜினி புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட பாமக-தான் காரணம் என கூறினேன். இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்வியை ஊடகங்கள் போடாததால் அந்த பதிலின் தொனியே மாறிவிட்டது.
ஊடக நண்பர்கள், பாமகவுக்கு மட்டும் நெருக்கடி கலந்த இட ஒதுக்கீட்டு முறையை கடைபிடிப்பதால், ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் செய்தியை குறுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அதனால், கண்ட இடத்தில் வெட்டுவதால், தலைக்கு அடுத்து மார்பு இல்லாமல் வயிறு வந்துவிடுகிறது. அதனால் அர்த்தமே மாறி குழப்பங்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே ஊடகங்கள் யார் சொல்கிறார்கள் என்ற அடிப்படையில் செய்தி வெளியிடாமல், என்ன சொல்கிறார்கள் என்ற அடிப்படையில் செய்தி வெளியிட வேண்டும். அதுதான் ஊடக அறத்தின் அடிப்படை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
