ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான முடிவை ஆளுநர் சுதந்திரமாக எடுக்கலாம் என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யும் விஷயத்தில் தமிழக ஆளுநரே சுதந்திரமாக முடிவெடுக்கலாம்; இந்த விஷயத்தில் மத்திய அரசிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது அனைவரும் அறிந்த உண்மை தான் என்றாலும் கூட, 7 தமிழர் விடுதலையை விரைவுபடுத்த உதவும் என்ற அளவில் வரவேற்கத்தக்கதாகும். இவ்வளவுக்குப் பிறகும் இதுதொடர்பான விஷயங்களில் முடிவெடுக்க காலநிர்ணயம் செய்யப்படவில்லை என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு 7 தமிழர் விடுதலையை ஆளுநர் தாமதித்தால் அதை விட கொடுமையான மனித உரிமை மீறல் எதுவும் இருக்க முடியாது. அதை தமிழ்நாடும் ஏற்காது.

ராஜிவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் விரும்பும் சூழலில், அதை அமைச்சரவையும் பரிந்துரைத்துள்ள நிலையில், அதை நிறைவேற்றுவது தான் ஆளுநரின் கடமை ஆகும். எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான ஆணையை ஆளுனர் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி..! சரக்கு விலை தாறுமாறு உயர்வு..! இன்று அமலாகிறது..!