Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி பழனிசாமியிடம் ராமதாஸ் வைத்த டிமாண்ட்... பெருமூச்சு விடவைக்கும் கடிதம்..!

தமிழ்நாட்டில் புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக "சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

Ramadoss demand for Edappadi Palanisamy ... Letter of sighing
Author
Tamil Nadu, First Published Dec 20, 2019, 12:42 PM IST

அந்தக் கடிதத்தில்,அன்புள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, வணக்கம்!

மனிதர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று உயிர்வாழ தூய்மையானக் காற்றை சுவாசிப்பது ஆகும். ஆனால், காலநிலை மாற்றம் காற்று மாசு காரணமாக அந்த உரிமை கூட மக்களுக்கு கிடைக்காத நிலையில், தமிழக மக்களுக்கு தூய காற்று கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது குறித்து தங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்.

Ramadoss demand for Edappadi Palanisamy ... Letter of sighing

காற்று அனைவருக்கும் பொதுவானது. ஏழை, பணக்காரர், மதம், மொழி என மக்களின் அடையாளங்கள் வேறுபட்டாலும் நாம் எல்லோரும் ஒரே காற்றை தான் சுவாசிக்கின்றோம். தூய காற்று ஒரு அடிப்படை மனித உரிமையும் கூட. ஆனால், இன்று நகர்ப்புறங்களில் தூய காற்று காணக்கிடைக்காத அதிசயம் ஆகிவிட்டது. பெருநகரங்களில் வானம் அதன் நீல நிறத்தை இழந்துவிட்டது! உயரைக் காக்கும் சுவாசக் காற்றே, இன்று மக்களின் உயிரை எடுக்கும் நஞ்சாகவும் மாறிவிட்டது. இதற்கு மனித தவறுகளே காரணமாகும்.

அதே நேரத்தில், நம்பிக்கை அளிக்கும் விதமாக காற்று மாசு சிக்கலுக்கு அறிவியல் பூர்வமான தீர்வுகளும் இருக்கின்றன. தனது மக்களுக்கு மிகத்தூய்மையான காற்றை அளிக்கும் மேற்கு ஐரோப்பிய நாட்டு நகரங்களை போல சென்னை பெருநகரையும் மாற்ற முடியும். அரசியல் உறுதி இருந்தால் அது முற்றிலும் சாத்தியமானது தான்.

# காற்று மாசுபாட்டினால் உலகில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் இறந்து போகின்றனர். உலகிலேயே மிகவும் மாசுபட்ட நாடு இந்தியா! இந்தியாவில் 12 லட்சம் பேர் காற்று மாசுபாட்டினால் சாகிறார்கள். இந்தியர்களின் மரணத்துக்கு மூன்றாவது பெரிய காரணம் காற்று மாசுபாடுதான். இந்தியாவில் 8 இறப்புகளில் ஒன்றிற்கு காற்று மாசுபாடு காரணமாக உள்ளது. சென்னை மாநகரம் இந்திய அளவில் மிகவும் மாசுபட்ட இரண்டாவது நகரமாக உள்ளது.

# ஒரு கன மீட்டர் காற்றில் PM 2.5 நுண் துகள் மாசு 10 மைக்ரோகிராம் அளவுக்குள் இருக்க வேண்டும். எனினும் இந்தியாவில் இதனை முதல் கட்டமாக 35 எனும் அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்திய அரசு 40 மைக்ரோகிராம் என்பதை உச்ச அளவாக அறிவித்துள்ளது. ஆனால், அண்மையில் சென்னை நகரில் PM 2.5 நுண் துகள் மாசு 300 அளவை கடந்து 450 எனும் அளவை எட்டியது. கொடுங்கையூரில் உச்சமாக 935 எனும் அளவினை எட்டியது.

# சென்னையில் ஆண்டுக்கு 100 நாட்கள் நச்சுக்காற்றை சுவாசிக்கும் நிலையில் மக்கள் உள்ளனர். சென்னை நகரின் காற்று மாசு அளவு, மணலி காற்று மாசு கண்காணிப்பு கருவி பதிவுகள் படி, நவம்பர் 5 வரையிலான 365 நாட்களில் 119 நாட்கள் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக இருந்துள்ளது. பொது அமைப்புகள் சென்னையின் 15 இடங்களில் மேற்கொண்ட ஆய்வில் அனைத்து இடங்களிலுமே 70 மைக்ரோ கிராம் அளவுக்கு மேல் 187 மைக்ரோ கிராம் வரை இருந்தது கண்டறியப்பட்டது. மொத்ததில் சென்னை நகரில் மக்கள் சுவாசிக்கும் காற்று பல நாட்களில் அபாய நிலையில் இருப்பது தெளிவான உண்மை ஆகும்.

# சென்னை நகரில் தனியார் வாகங்களின் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்து வருவதும், பொதுப்போக்குவரத்து வசதிகள் கவனிக்கப்படாமல் இருப்பதும் தான், காற்று மாசுபாட்டுக்கான முதன்மை காரணம் ஆகும். சென்னையில் ஓடும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை 2007 ஆண்டில் 30 லட்சமாக இருந்தது. தற்போது பல மடங்கு அதிகரித்து 66 லட்சத்தை கடந்துவிட்டது. ஆனால், MTC பேருந்துகளின் எண்ணிக்கை 1998 ஆண்டில் 2800 ஆக இருந்தது. இருபது ஆண்டுகள் கடந்து வெறும் 700 பேருந்துகள் மட்டுமே அதிகரித்து தற்போது 3500 அளவிலேயே இருக்கிறது. (அதிலும் சுமார் 70% பேருந்துகள் காலம் கடந்தவை)Ramadoss demand for Edappadi Palanisamy ... Letter of sighing

# சென்னை மாநகராட்சி 2014 ஆம் ஆண்டில் வெளியிட்ட வாகனமில்லா போக்குவரத்து கோள்கையில் (Chennai Non-Motorised Transport Policy) 2018 ஆம் ஆண்டுக்குள் 80% சாலைகளில் தரமான நடைபாதையை அமைப்போம் என கூறப்பட்டது. ஆனால், இன்னமும் பெரும்பாலான சாலைகளில் முறையான நடைபாதைகள் அமைக்கப்படவில்லை. சென்னை நகரின் போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்க சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (Chennai Unified Metropolitan Transport Authority - CUMTA) 2010 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கான விதிகளை உருவாக்கி அரசாணை 2019 ஜனவரி மாதம் தான் வெளியிடப்பட்டது. அதன் முதல் கூட்டம் இன்னமும் கூட நடக்கவில்லை!

# ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட பல நோய்களை காற்று மாசுபாடு உருவாக்குகிறது. 43% நுரையீரல் நோய்களுக்கும், 27% நுரையீரல் 24% பக்கவாத பாதிப்புக்கும், 25% இருதய நோய் பாதிப்புக்கும் காற்று மாசுபாடு காரணம். இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வாழும் குழந்தைகளின் வாழ்நாளில் இரண்டரை ஆண்டுகள் காற்று மாசுபாட்டால் குறைகிறது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சென்னையில் வாழும் எல்லா மக்களையும் காற்று மாசுபாடு பாதித்துள்ளது. குறிப்பாக, காற்று மாசுபாட்டினால் குழந்தைகள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர். 5 ஆண்டுகளில் சென்னை நகரில் குழந்தைகள் ஆஸ்துமா இரண்டு மடங்கு அதிகமாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல் சென்னை மாநகரின் காற்று மாசுபாட்டை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த வேண்டும். இந்திய அரசு 10.01.2019 ஆம் நாள் தேசிய தூய காற்று திட்டத்தை (National Clean Air Program - NCAP) வெளியிட்டது. இந்தியாவின் 102 நகரங்களின் காற்று மாசுபாட்டை 2017 ஆம் ஆண்டு மாசு அளவுக்கு கீழாக 2024 ஆம் ஆண்டுக்குள் 20% - 30% அளவு குறைப்பதற்கு இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்த திட்டத்தில் தூத்துக்குடி தவிர தமிழக நகரங்கள் எதுவும் இல்லை. அதிக அளவு காற்று மாசுபட்டுள்ள சென்னை மாநகரம் அத்திட்டத்தில் இல்லை. இந்நிலையை மாற்றி தேசிய தூய காற்று திட்டத்தில் சென்னை மாநகரை சேர்க்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

அதே நேரத்தில், மத்திய அரசின் உதவிக்காக காத்திருக்காமல் - தமிழ்நாடு அரசே சென்னை மாநகருக்கான காற்று மாசு தடுப்பு திட்டத்தை உடனடியாக உருவாக்கி, அதனை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி சென்னை மாநகர மக்களின் தூயக்காற்றுகான அடிப்படை மனித உரிமையை காப்பாற்ற வேண்டும்.

சென்னை மக்களுக்கு தூய சுவாசக்காற்றை அளிப்பதன் மூலம் சுமார் ஒரு கோடி மக்களின் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும். மேலும், புவிவெப்படைவதற்கு காரணமான பசுங்குடில் வாயுக்களை குறைக்கவும் முடியும்.

இவ்வாறான ஒரு சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை உருவாக்கும் போது அதில் பின்வரும் நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.


தூய காற்று செயல்திட்டம்

1. தூய காற்று செயல்திட்டம் (Clean Air Action Plan): உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள காற்றுத்தர அளவுகளை அடையும் நோக்கில், சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை வகுத்து, அதனை குறுகிய கால, இடைக்கால, நீண்டகால இலக்குகளுடன் அடையும் வகையில் உருவாக்கி செயல்படுத்த வேண்டும். மேலும், இந்திய அரசின் தூய காற்று செயல்திட்டத்தில் (National Clean Air Program - NCAP) சென்னை பெருநகரை இணைக்க வேண்டும்.

"புழுதி தடுப்பு"

2. புழுதி நீக்குதல் (Dust removal): சாலைகளில் குவியும் புழுதியை அகற்றி தூய்மையாக பராமரிக்க வேண்டும். புழுதி அகற்றும் தானியங்கி வாகனங்களை (Mechanical dust removal, Vacuum cleaning of roads) பயன்படுத்தி சாலைப்புழுதியை நீக்க வேண்டும்.

3. முழுமையான சாலை: சாலைகளில் புழுதி படிவதை தடுக்கும் நோக்கில் சென்னை நகரின் சாலைகளை 'சுவர் முதல் சுவர் வரை' (wall to wall paving) தரமாக அமைக்க வேண்டும். அவற்றில் உரிய மழைநீர் சேகரிப்பு, மழைநீர் வடிகால் வசதிகளுடன் 'பஞ்சு நகரம்' (Sponge City) எனும் நுட்பத்துடன் அமைக்க வேண்டும்.

4. பசுமைப் பகுதி: சாலை ஓரங்களிலும், நடுவிலும் பசுமைப் பகுதிகளை அமைக்க வேண்டும். திறந்த பொது இடங்களை பசுமைப் பகுதிகளாக மாற்ற வேண்டும். சாலையோரங்களில் மரங்களை வளர்க்க வேண்டும். சென்னை பெருநகரின் பசுமை மேம்பாட்டுக்காக 'மரங்கள் ஆணையத்தை' (Trees Authority) உருவாக்க வேண்டும்.

5. கட்டுமான புழுதி: இந்திய அரசின் கட்டுமானம் மற்றும் கட்டிட கழிவு மேலாண்மை விதிகள் 2016 (Construction & Demolition Waste Management Rules 2016) என்ற விதி முறைகளை சென்னை பெருநகரில் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

"வாகனப் புகை தடுப்பு"

6. வாகனப் புகை சோதனை (Inspection & Maintenance): வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையை கட்டுக்குள் வைக்கும் விதிகளை முழுமையாக செயலாக்குவதற்காக உரிய முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கோண்டு, அதன் தொடர்ச்சியாக வாகனப்புகை தடுப்பு சட்டவிதிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். மாசுபடுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு உரிய விதிகளின் கீழ் தண்டம் விதிக்க வேண்டும்.

7. பரிசோதனை மையம்: வாகனப்புகையை பரிசோதனை செய்யும் மையங்களை நவீனமாகவும் உரிய எண்ணிக்கையிலும் அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் உடனடியாக அமைக்க வேண்டும்.

8. வாகனப்புகை சான்று: Pollution Under Control (PUC) Certificate எனப்படும் வாகனப்புகை சான்றிதழ்களை இந்திய அரசின் வாஹன் இணையத்தில் (Vahan 4.0 portal) மேலும் காலதமதமில்லாமல் இணைக்க வேண்டும்.

9. ரிமோட் சென்சார் சோதனை: புகை கட்டுப்பாட்டு விதிகளை மீறும் வாகனங்களை கண்டறிவதற்காக தொலைதூர திறனுணர்வு (ரிமோட் சென்சார்) கருவிகள் மூலம் மாசுக்காட்டுப்பாட்டு விதிகளை மீறும் வாகங்களை கண்டறியும் முறையை சென்னையில் அறிமுகப்படுத்த வேண்டும். சென்னைக்குள் நுழையும் வழிகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் இக்கருவிகளை அமைக்க வேண்டும்.

10. புகைக்கரி இல்லா பேருந்துகள்: சென்னையில் இயங்கும் MTC பேருந்துகளை புகைக்கரி இல்லாத பேருந்துகளாக (Soot free buses) மாற்ற வேண்டும்.

11. எரிவாயு தானிகள்: சென்னையில் இயங்கும் டீசல், பெட்ரோல் ஆட்டோக்களை போதுமான அளவு மானியம் கொடுத்து எரிவாயு (LPG) ஆட்டோக்களாக அல்லது மின்சார ஆட்டோக்களாக மாற்ற வேண்டும். போதுமான எண்ணிக்கையில் எரிவாயு நிரப்பும் மையங்களை அமைக்க வேண்டும்.

12. கனரக வாகனகள்: சென்னை துறைமுகத்திற்கு வரும் கனரக வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டும்.

13. நகருக்குள் மாசில்லா பகுதி: சென்னை மாநகரின் முக்கியமான பகுதிகளை, தனியார் கார்கள் நுழைய தடைவிதிக்கப்பட்ட குறைந்த மாசு பகுதிகளாக (Low Emission Zone) சோதனை முறையில் அறிவிக்க வேண்டும்.

"குப்பை எரிப்பு"

14. குப்பை எரிப்பு: கொடுங்கையூர் உள்ளிட்ட, சென்னை பெருகரின் அனைத்து இடங்களிலும் புறநகரிலும் குப்பை எரிக்கப்படுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்..

15. அரசே குப்பை எரித்தல்: குப்பையிலிருந்து மின்சாரம் எடுப்பதாகக் கூறி, ஆபத்தான குப்பை எரிப்பு (Waste-to-energy) திட்டங்களை சென்னை பெருநகரில் நிறுவக்கூடாது. அத்தகைய திட்டங்களை கைவிட வேண்டும்.

16. பிளாஸ்டிக் தடை: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

"போக்குவரத்து"

17. பேருந்துகள்: MTC பேருந்துகளின் எண்ணிக்கையை 8000 மாசில்லாத தூய பேருந்துகளாக அதிகரிக்க வேண்டும்.

18. நடைபாதை: 2014 மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்து கொள்கையில் (Chennai Non-Motorised Transport Policy 2014) அறிவித்தபடி சென்னை பெருநகரில் முழுமையான அளவில் நடைபாதைகளையும் மிதிவண்டி வழிகளையும் மக்கள் கூடும் இடங்களையும் அமைக்க வேண்டும்.Ramadoss demand for Edappadi Palanisamy ... Letter of sighing

19. வாகன நிறுத்தம்: வாகன நிறுத்தங்களை முறைப்படுத்த வேண்டும். பொது இடங்களில் அரசாங்கமே அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் (Multi-level car parking) கட்டும் திட்டங்களை கைவிட வேண்டும்.

20. மின்சார போக்குவரத்து: மின்சார வாகனங்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான மின்னேற்ற கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

21. நவீன ஸ்மார்ட் சிக்னல் முறை: சென்னை பெருநகரின் போக்குவரத்து சிக்னல்களை நவீன ஸ்மார்ட் சிக்னல் எனப்படும் intelligent traffic control system முறைக்கு மாற்ற வேண்டும்.

22. இலவச பேருந்துகள்: சென்னை MTC பேருந்துகளில் பெண்கள், குழந்தைகள், முதியோரின் பயணத்தை இலவசம் ஆக்க வேண்டும்.

23. சென்னை போக்குவரத்து ஆணையம்: சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தை (Chennai Unified Metropolitan Transport Authority - CUMTA) முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இதன் மூலம் வளர்ச்சிக்கான போக்குவரத்து முறையை (Transit Oriented Development - TOD) செயல்படுத்த வேண்டும்.

"புகை கண்காணிப்பு & விழிப்புணர்வு"

24. காற்று மாசு கண்காணிப்பு: சென்னை பெருநகரின் காற்று மாசுப்பாட்டை உடனுக்குடன் கண்காணிக்கும் கருவிகளின் (continuous ambient air quality monitoring systems) எண்ணிக்கையை தற்போதைய 3 என்பதில் இருந்து 40 ஆக அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியின் காற்றின் தரத்தை கணித்து அதனை உடனுக்குடன் பொது இடங்களில் காட்சிப்படுத்த வேண்டும்.

"தொழிற்சாலை மாசு"

25. அனல்மின் நிலையம்: அனல்மின் நிலையங்களின் காற்று மாசுபாட்டினை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும். அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் சென்னை மற்றும் புறநகரில் உள்ள நிலக்கரி அனல்மின் நிலையங்களை நிரந்தரமாக மூட வேண்டும். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட தொழிற்சாலை மாசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.

- மேற்கண்ட நடவடிக்கைகள் அடங்கிய சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை (Clean Air Action Plan) வகுத்து செயல்படுத்துவதன் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு தூய காற்று கிடைப்பதை உறுதி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன் மருத்துவர் ச. இராமதாசு’’ என அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios