சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் நீடிப்பதை உறுதி செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் இழுத்தடித்து வரும் நிலையில் அமைச்சர்கள் நேரில் சென்று அவரை சந்தித்து பேசியுள்ளனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிட்ட கட்சி பாமக. அத்துடன நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் பாமகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த டீல் முடிந்த உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தைலாபுரம் சென்று ராமதாசை சந்தித்தனர். அப்போது முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பாமக சார்பில் தடல் புடல் விருந்து அளித்து கவனிக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் கூட சில காலம் பாமக – அதிமுக உறவு சீராகவே இருந்தது. ராமதாஸ் அறிக்கை விடுவதும் அதற்கு முதலமைச்சர் பதில் அளிப்பதுமாக சுமூகமான உறவே இரண்டு கட்சிகள் இடையே நீடித்தது. ஆனால் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு, அதற்கு முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவு விவகாரத்தில் பாமக சற்று ஒதுங்கியிருந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

ஆனால் பாமக சார்பில் ராமதாஸோ, அன்புமணியோ வரவில்லை, மாறாக ஜி.கே.மணியை தான் ராமதாஸ் அனுப்பி வைத்தார். இதே போல் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பெயரளவிற்கு பாஜக, தேமுதிக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் கட்சியின் ஈஸ்வரன் கூட எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி அறிக்கை வெளியிட்டார். ஆனால் இந்த விஷயத்தில் தற்போது வரை ராமதாஸ், அன்புமணி வாய் திறக்கவில்லை.

இதற்கு காரணம் சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் தற்போது அவசரம் வேண்டாம் என்று ராமதாஸ் முடிவெடுத்தது தான் என்கிறார்கள். ஆனால் பாமக அதிமுக கூட்டணியில் தான் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கிடையே வரும் 27ந் தேதி சென்னையில் அதிமுகவின் பிரமாண்ட தேர்தல் பிரச்சார துவக்க பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டமாக இருந்தாலும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்து பிரமாண்டமாக நடத்த எடப்பாடி பழனிசாமி ஆர்வமாக உள்ளார்.

பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் தான் அதிமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள். இந்த கட்சிகளில் தேமுதிக, பாஜகவை எளிதாக கூட்டத்திற்கு அழைத்து வந்துவிடலாம் என்று எடப்பாடிப ழனிசாமி நம்புகிறார். அதோடு இது தொடர்பான அழைப்பும் ஏற்கனவே அந்தந்த கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாமக தவிர மற்ற கட்சிகளிடம் இருந்து சாதகமான பதிலே அதிமுகவிற்கு கிடைத்துள்ளது. வழக்கம் போல் பாமக தான் முரண்டு பிடிப்பதாக கூறுகிறார்கள். இதனால் தான் ராமதாசை சமாதானம் செய்ய அமைச்சர்கள் தங்கமணி மற்றும் கே.பி.அன்பழகனை முதலமைச்சர் தைலாபுரத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.

அங்கு சென்ற அமைச்சர்கள் ராமதாசை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியுள்ளனர். அத்தோடு, பாமக எதிர்பார்க்கும் தொகுதிகள் எத்தனை, எந்தெந்த தொகுதிகள் என்கிற விவரத்தையும் ராமதாசிடம் நேரடியாக அமைச்சர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பாமக தரப்பில் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையை ராமதாஸ் தோராயமாக கூறியதாகவும், ஆட்சியில் பங்கு என்கிற விஷயத்தையும் அவர் முன்வைத்ததாக சொல்கிறார்கள். மேலும் வரும் 27ந் தேதி சென்னையில் நடைபெறும் அதிமுக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது குறித்து யோசிப்பதாகவும் அமைச்சர்களிடம் சொல்லி அனுப்பியுள்ளதாக தெரிகிறது.