சம்பளம் தர கூட காசு இல்லையா? மதுரை காமராசர் பல்கலை.யில் நடப்பது என்ன? ராமதாஸ் கேள்வி!!
கருத்துச் சுதந்திரத்திற்குத் தடை விதித்து பல்கலைக்கழகங்களைப் பள்ளிக்கூடங்களாக மாற்ற முயல்வது நியாயமற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரத்திற்குத் தடை விதித்து பல்கலைக்கழகங்களைப் பள்ளிக்கூடங்களாக மாற்ற முயல்வது நியாயமற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களின் குறைகளையும், கருத்துகளையும் ஊடகங்களிடம் தெரிவிக்கக்கூடாது; ஏதேனும் அறிக்கை வெளியிடுவதாக இருந்தால் அதைப் பதிவாளரிடம் காட்டி ஒப்புதல் பெற்றுத்தான் வெளியிட வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை பார்க்கும்போது மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதோ? என்ற எண்ணம் ஏற்படுகிறது; இது கண்டிக்கத்தக்கது. பல்கலைக்கழக நிகழ்ச்சிகளுக்காக ஏதேனும் முக்கியப் பிரமுகர்கள், சிறப்பு விருந்தினர்களை அழைப்பதாக இருந்தாலும்கூட, அது குறித்து இரு வாரங்களுக்கு முன்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகப் பொறுப்புப் பதிவாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சட்டத்தின் எட்டாவது அத்தியாயத்தின் 29 ஆவது பிரிவின்படி விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் - மாணவர்களின் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் செயல் ஆகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இத்தகையக் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதில் எந்த வியப்பும் இல்லை. மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் தேவையில்லை. ஆனால், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஏராளமான குறைகள் தலைவிரித்தாடுகின்றன; எண்ணற்ற முறைகேடுகள் நடக்கின்றன.
அவை குறித்த உண்மைகளை பேராசிரியர்களும், மாணவர்களும் அம்பலப்படுத்தி விடுவார்களோ? என்ற அச்சம் காரணமாகத்தான் இத்தகைய கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதித்துள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழகத்தின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகம் என்றாலும் கூட, அங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை. மாணவர் விடுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடை, சுகாதாரமற்ற உணவு, அசுத்தமான கழிப்பறைகள் உள்ளிட்ட பிரச்சினைகளைச் சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த சில நாட்களுக்கு முன் மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்கள். இந்த விஷயத்தில் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாயின. பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர்களை நியமிப்பதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததை சுட்டிக்காட்டி, தமிழக அரசு நிதி வழங்க மறுத்துவிட்ட நிலையில், ஊதியம் வழங்குவதற்குக் கூட பல்கலைக்கழகத்தில் நிதி இல்லை. ஓய்வூதியப் பயன்களை வழங்க பல்கலைக்கழகக் கணக்கில் இருந்த ரூ.400 கோடியை, ஊதியம் உள்ளிட்ட தேவைகளுக்காக செலவழித்து விட்ட நிர்வாகம், இப்போது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்காக பேராசிரியர்கள் செலுத்தியிருந்த நிதியை எடுத்துச் செலவழிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த சில மாதங்களில் ஊதியம் வழங்குவதற்குக்கூட நிதியில்லாத நிலை ஏற்படலாம். இவை தவிர மேலும் பல குறைபாடுகள் இருப்பதால் அது குறித்து எவரும் விமர்சிக்கக்கூடாது என்பதற்காகவே இத்தகைய வாய்ப்பூட்டு உத்தரவை பல்கலைக்கழகம் பிறப்பித்துள்ளது. இது சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது.
அண்மைக்காலமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துரிமையைப் பறிப்பது பல்கலைக்கழகங்களின் பாணியாக மாறி வருகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட நிர்வாகத்திற்கு எதிராக அங்கு மாணவர்கள் போராடிய போது, இதே போன்ற தடை பிறப்பிக்கப்பட்டது. இப்போது அதே நடைமுறையை காமராசர் பல்கலைக்கழகமும் மேற்கொண்டிருக்கிறது. மக்களிடம் எதிர்ப்பு எழும்போது இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது உலகம் முழுவதும் உள்ள ஆட்சியாளர்களின் வழக்கமாக இருக்கிறது. துணைவேந்தர் என்பதில் வேந்தர் என்ற வார்த்தை இருப்பதால், தங்களை மன்னர்களாகக் கருதிக் கொண்டோ, என்னவோ பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் அண்மைக் காலமாக இத்தகைய அடக்குமுறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். கல்வி நிலையச் சூழலுக்கு இது அழகு சேர்க்காது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான விதைகள் பல்கலைக்கழகங்களில் மாணவர்களால்தான் விதைக்கப்பட்டன. அவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்குத் தடை விதித்து பல்கலைக்கழகங்களைப் பள்ளிக்கூடங்களாக மாற்ற முயல்வது நியாயமற்றது. அதனால், கருத்துச் சுதந்திரத்தைத் தடை செய்யும் வகையிலான சுற்றறிக்கையை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். மாறாக, பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும் காமராசர் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.