Asianet News TamilAsianet News Tamil

100 நாள் வேலை திட்டத்திற்கு பாதிப்பு..?

ramadoss condemns less fund allocation for MGNREGA
ramadoss condemns less fund allocation for MGNREGA
Author
First Published Feb 2, 2018, 2:22 PM IST


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் முடங்கும் அபாயம் உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு குறைவான நிதியே ஒதுக்கப்பட்டிருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.55,000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட இது அதிகம் தான் என்றாலும் ஊரக மக்களுக்கு ஓரளவுக்கு வேலை வழங்குவதற்குக் கூட இந்த நிதி போதுமானதல்ல என்பது தான் அனுபவப்பூர்வ உண்மையாகும்.

ramadoss condemns less fund allocation for MGNREGA

கிராமப்புறங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவது தான் இத்திட்டத்தின் நோக்கம் என்றாலும் கூட, சராசரியாக 50 நாட்களுக்குக் கூட வேலை வழங்கப் படுவதில்லை என்பது தான் உண்மையாகும். இதற்குக் காரணம் நிதிப்பற்றாக்குறை தான். 2018-19ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ.55,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும் கூட உண்மை இதுவல்ல. காரணம் இந்த ஒதுக்கீட்டில் பெரும்பகுதி பழைய கடன்களை அடைப்பதற்கே செலவாகி விடும். இத்திட்டத்திற்கு போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததால் 2012-13 ஆம் ஆண்டில் பயனாளிகளுக்கு ரூ.2034 கோடி ஊதிய நிலுவை ஏற்பட்டது. இதுபடிப்படியாக அதிகரித்து 2016-17 ஆம் ஆண்டின் முடிவில் ரூ.13,220 கோடி ஆனது. 

ramadoss condemns less fund allocation for MGNREGA

2017-18ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.48,000 கோடியில் நிலுவைத் தொகையை வழங்கியது போக மீதமுள்ள நிதியைக் கொண்டு தான் புதிய பணிகளுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. அதனால் ஜனவரி மாத இறுதிவரை ரூ.4786 கோடி ஊதிய நிலுவை சேர்ந்துள்ளது. மீதமுள்ள இரு மாதங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் பணிகளுக்கான ஊதியத்தையும் சேர்த்தால் மார்ச் மாத  முடிவில் நிலுவைத் தொகை ரூ.15,000 கோடியைத் தாண்டி விடும். வரும் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் இந்த நிலுவைத் தொகையை வழங்கிவிட்டால் மீதமுள்ள ரூ.40,000 கோடியை வைத்துக் கொண்டு ஏழை மக்களுக்கு போதிய அளவில் வேலை வழங்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

ramadoss condemns less fund allocation for MGNREGA

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்ற பதிவு செய்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 12.63 கோடியாகும். இவர்களில் 7.21 கோடி குடும்பங்கள் மட்டுமே இத்திட்டப்படி பணி செய்து வருகின்றன. இத்திட்டப்படி ஒரு நாளைக்கு ரூ.241 ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் மீதமுள்ள  ரூ.40,000 கோடியைக் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 23 நாட்கள் மட்டுமே வேலை வழங்க முடியும். தொடர்ச்சியாக பணி செய்து வரும் 7.21 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 40 நாட்களாவது வேலை வழங்க வேண்டுமானால் ரூ.69,504 கோடி தேவைப்படும். பழைய நிலுவைத் தொகையையும் கணக்கில் சேர்த்தால் குறைந்தது ரூ.85,000 கோடி தேவைப்படும். இதில் நிர்வாகச் செலவு சேர்க்கப்பட வில்லை. 5% நிர்வாகச் செலவு என்று வைத்துக் கொண்டால் குறைந்தது ரூ.90,000 கோடி தேவை. அவ்வாறு இருக்கும் போது இப்போது ஒதுக்கப்பட்ட தொகையைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது.

கடந்த காலங்களில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 23 முதல் 25% வரை அதிகரிக்கப்பட்டு வந்தது. ஆனால், வரும் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு வெறும் 15% மட்டுமே அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது போதுமானதல்ல. அதுமட்டுமின்றி இந்தியாவின் 12 மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலவுவதால் அங்கு இத்திட்டம் கூடுதல் நாட்களுக்கு செயல்படுத்தப்பட வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த வரையரைக்குள்ளும் அடங்காமல் பெயரளவுக்கு மட்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஒதுக்கீட்டை அதிகரித்திருப்பது யாருக்கும் பயனளிக்கப் போவதில்லை.

ramadoss condemns less fund allocation for MGNREGA

2017-18 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ.48,000 கோடி வழங்கப்பட்ட நிலையில், அந்தத் தொகை முதல் 6 மாதங்களில் செலவழிக்கப்பட்டது. அதனால் கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு பயனாளிகள் யாருக்கும் ஊதியம் வழங்கப்படாமல் திட்டம் முடங்கிக் கிடக்கிறது. வரும் ஆண்டில் 6 மாதங்களுக்கு முன்பே இத்திட்டம் முடங்கும் வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்கும் வகையிலும், ஊரக மக்களுக்கு  நியாயமான காலத்திற்கு வேலை வழங்கும் வகையிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை ரூ. 1 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios