*    தஞ்சை கோவிலில் பிப்ரவரி 5-ல் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதை, முழுக்க முழுக்க தமிழ் முறைப்படிதான் நடத்த வேண்டும். தேவாரம், திருவாசகத்தை பாடியே குடமுழுக்கு செய்ய வேண்டும். கல்வெட்டுகள், சிற்பஞ்களுக்குள் இடைச்செருகல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 
-    சீமான் (நாம் தமிழர் கட்சி தலைவர்)

*    தி.மு.க.வில் ‘நானும் என் மகனும் மட்டும்தான்’ என்ற ரீதியில் குடும்ப கட்சியாகவே அது இருக்கிறது. அந்த கட்சித் தலைவர், தன் சகோதரர் வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாதவர். ஆனால், சமூகத்தைப் பற்றி கவலைப்படுவது போல பிற நாட்டு முஸ்லீம்கள் குறித்துக் கவலைப்படுகிறார். 
-    ராம் மாதவ் (பா.ஜ.க. பொதுச்செயலாளர்)

*    களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.ஐ. வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது, தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்க முயற்சிப்பது போல உள்ளது. அதை ஒடுக்க வேண்டும். இந்த துணிகரம் குறித்து, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
-    ஜெயக்குமார் (இந்து முன்னணி மாநில துணைத்தலைவர்)

*    கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்தில் நீட் தேர்வை மத்திய அரசால் நடத்தி இருக்க முடியுமா? இன்று தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் மத்திய அரசுக்கு சலாம் போடுபவர்கள். எனினும், நீட் விண்ணப்பத்திற்கான கடைசி நாளில், உச்ச நீதிமன்ற சென்று தடைகோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். தும்பை விட்டு, வாலை பிடிப்பதா?
-    கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்)

*    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சாணக்கியத்தனத்துடன் செயல்படுகிறார். எங்கள் அரசு மீது எந்த புகாரும் கூற முடியாத வகையில், அருமையாக ஆட்சி செய்கிறார். அதனால் பொய் பிரசாரங்களை தி.மு.க. கட்டவிழ்த்து விடுகிறது. வெளியே புலி போலவும், சட்டசபையில் எலியாகவும் அக்கட்சி செயல்படுகிறது. 
-    செல்லூர் ராஜூ (கூட்டுறவுத்துறை அமைச்சர்)

*    இரண்டு மணி நேரத்திற்குள் எத்தனை பெரிய சிறப்பான கதையாக இருந்தாலும், அதை அடக்கத் தெரிய வேண்டும். அப்போதுதான் நல்ல படத்தை கொடுக்க முடியும். அப்படி முடியாதவர்கள், வெப் சீரீஸ் பக்கம் வந்துவிட வேண்டும். கட்டுப்பாடுகள் இல்லாமல், சுதந்திரமாக எடுக்க முடியும். அதனால்தான் உலகின் முன்னணி இயக்குநர்கள் கூட வெப் சீரீஸ் பக்கம் பார்வையைத் திருப்புகின்றனர். வரும் காலத்தில், வெப் சீரீஸ்தான் பெரிய வளர்ச்சி அடையும். 
-    கவுதம் வாசுதேவ் மேனன் (இயக்குநர்)

*    நான் இப்போதுதான் அரசியலுக்கு வந்தேன்! என கூறுவது சரியில்லை. ‘ஹே ராம்’ படத்தை நான் எடுத்த போதே அரசியலுக்கு நான் வந்துவிட்ட மாதிரிதான். அது போன்ற படத்தையெல்லாம் இப்போதைய காலகட்டத்தில் எடுக்க முடியாது. சூழல்கள் மாறிவிட்டது. 
-    கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம் தலைவர்)

*    தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு, மத்திய அரசால் வாபஸ் பெறப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்காவுக்குமான சிறப்பு பாதுகாப்பு படையை 2019 நவம்பரில் மத்திய அரசு திரும்பப் பெற்றது. இது அப்பட்டமான பாரபட்ச நடவடிக்கை. 
-    கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

*    ஏதோ கூடினோம், கலைந்தோம் என தமிழக சட்டசபை முடிந்திருக்கிறது. மாநில மக்களின் நலன்களைக் காக்கவும், உரிமைகளை மீட்கவும், சட்டங்களையும் திட்டங்களையும் வகுக்க வேண்டிய சட்டசபையை ஆளும் தரப்பினர் பொழுதுபோக்குக்காக பயன்படுத்திடும் போக்கே தொடர்கிறது. 
-    மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*    தர்மபுரி மாவட்டம், ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு, இரு ஆசிரியர்கள் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. கண்டிக்க வேண்டிய தலைமை ஆசிரியரும் இந்த தீஞ்செயலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் மூவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். 
-    டாக்டர் ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)