ramadoss condemns edappadi

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளி என்பதால் அவருக்கு கடற்கரையில் நினைவு மண்டபம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஒருவருக்கு நினைவு மண்டபம் அமைத்து ஜெயலலிதாவை தியாகியாக்கும் செயல் கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைந்த சில நாட்களில் அப்போதைய முதல்வர் ஓபிஎஸ் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு அருகில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். 

ஆனால் அப்போது ஜெயலலிதா எந்த வழக்கிலும் தண்டிக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் அப்போது எதிர்ப்பு எழவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த 4 ஆண்டு சிறைத் தண்டனை, தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 

இந்த ஊழலில் ஜெயலலிதாவுக்கு உள்ள பங்கு குறித்து விரிவாக விளக்கியிருந்த உச்சநீதிமன்றம், தீர்ப்பளிக்கப்படும் போது ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால் அவருக்கு தண்டனை வழங்கவில்லை. எனினும் அவர் குற்றவாளி தான் என திட்டவட்டமாக கூறியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கெல்லாம் மேலாக நினைவு மண்டபம் எனப்படுவது பொதுவாழ்வில் ஒழுக்க சீலர்களாகவும், தியாகத் திருவிளக்காகவும் விளங்கியவர்களை போற்றுவதற்காக அமைக்கப்படுவது ஆகும் என தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் பட்சத்தில் அவரது வாழ்க்கையிலிருந்து அடுத்தடுத்த தலைமுறையினர் கற்றுக் கொள்ள என்ன இருக்கும்? தொட்டில் குழந்தை திட்டம் முதல் சுடுகாட்டு கூறை வரை அனைத்து நிலைகளிலும் ஊழல் செய்து லட்சக்கணக்கான கோடிகளை குவித்தார் என்பதைத் தான் ஜெயலலிதா நினைவிடத்திலிருந்து கற்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வருங்காலத் தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டுதலை வழங்குவதை தவிர்ப்பதற்காக, ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என எச்சரிப்பதாக ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.