ramadoss condemned to edappaadi government
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக வாகனங்களை அனுப்புமாறு பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மிரட்டப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் எங்கும் நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு பள்ளி மாணவர்களை அழைத்து சென்று சிரமபடுத்தகூடாது என கூறி சென்னையைச் சேர்ந்த, பாடம் நாராயணன் என்பவர் ஒரு வழக்கை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
அதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு மாணவ, மாணவியரை அனுமதிக்கக் கூடாது எனவும் இது போன்ற நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தது.
முன்னேற்பாடுகளும் அனுமதியும் இல்லாமல் மாணவர்களை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பது முறையான செயல் அல்ல என கூறி, இந்த வழக்கை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைத்தது உயர் நீதிமன்றம்.
இதையடுத்து விடுமுறை நாளிலாவது மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்க அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விடுமுறை நாளிலும் எம்.ஜி.ஆர் விழாவில் மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து தமிழக அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
இதைதொடர்ந்து அரசு சார்பில் மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
இந்நிலையில், ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலத்தில் நாளை நடைபெற உள்ள எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவிற்கு கூட்டத்தைச் சேர்க்க ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளின் நிர்வாகிகளை அழைத்துப் பேசிய அதிகாரிகள், பொதுமக்களை அழைத்து வர தங்கள் வாகனங்களை எரிபொருள் நிரப்பித் தந்து விட வேண்டுமென உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இல்லையெனில், வாகனங்களின் உரிமம் ரத்தாகும் என மிரட்டப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
