ஜல்லிகட்டு போராட்டத்தை போல் உழவர்களையும் மக்களையும் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தினால் மட்டுமே தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் அமைக்க முடியாது என்பதை மத்திய அரசு வேறு வேறு வார்த்தைகளில் கூறி விட்ட பிறகும், காவிரிப் பிரச்சினையில் உழவர்களின் நலனைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக ஆட்சியாளர்கள் வெற்று வசனங்களைப் பேசி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காலம் கடத்தும் செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கதாகும்.

டில்லியில் நடந்த மாநிலத் தலைமைச் செயலாளர்கள், நீர்ப்பாசனத்துறை செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையிலான குழுவினருடன் நேற்று ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஏதேனும் அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்தது.

ஆனால், முதலமைச்சரோ, இவ்விஷயத்தில் இதுவரை நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் தொகுத்துக் கூறி விட்டு, காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும், காவிரி நீரை ஆதாரமாகக் கொண்ட தமிழக விவசாயிகளின் நலன்களை பேணிப் பாதுகாக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீரவசனம் பேசியிருக்கிறார்.

இன்னொரு புறம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உச்சநீதிமன்றம் அளித்த 6 வாரக் கெடு முடிவடையும் வரை காத்திருக்கப் போவதாகவும், அதற்குள் வாரியம் அமைக்கப் படவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

முதல்வரும், துணை முதல்வரும் எந்த அடிப்படையில் மத்திய அரசை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் துரோகம் செய்ய மத்திய அரசு துணிந்து விட்டது. அதனால் தான் எந்த ஆலோசனையும் நடத்தாமல் காவிரி வாரியத்தை அமைக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள போதிலும், தேவையின்றி தலைமைச் செயலர்கள் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியதற்கு காரணமே மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தாமதப்படுத்த வேண்டும் என்பது தான்.

அதுமட்டுமின்றி, ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை; அதில் செயல்திட்டம் என்று தான் கூறப்பட்டுள்ளது; அதையும் கூட உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் அமைக்க முடியாது’’ என்றும் மத்திய அரசு உறுதிபட கூறிவிட்டது.

இதனால் இப்போது மட்டுமின்றி எப்போதுமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வாய்ப்பில்லை; ஒருவேளை காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த ஏதேனும் ஒழுங்குமுறை அமைப்பு ஏற்படுத்தப்பட்டாலும் கூட அது எந்த அதிகாரமும் இல்லாத சொத்தை அமைப்பாகத் தான் இருக்கும்.

இது மட்டும் நடந்து விட்டால், காவிரிப் பிரச்சினைக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் பயனில்லாமல் போய்விடும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் தமிழகத்திற்கு இப்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய பின்னடைவு. இதை உணராமலோ, அல்லது உணர்ந்தும் மத்திய அரசின் துரோகத்திற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு துணிச்சல் இல்லாமலோ ஆட்சியாளர்கள் அமைதியாக அடங்கிக் கிடப்பது வெட்கக்கேடானது ஆகும்.

காவிரிப் பிரச்சினையில் எதிர்க்கட்சியான திமுகவின் செயல்பாடுகள் கேலிக்குரியவையாக உள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலாம் என்று பாமக தெரிவித்த யோசனையை முதலில் வழிமொழிந்த திமுக, இப்போது பதவிகளை இழக்க வேண்டியிருக்குமோ என்ற எண்ணத்தில், அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். இது ஆட்சியாளர்களால் இழைக்கப்படும் துரோகத்தை விட மிக மோசமான துரோகமாக அமைந்து விடும்.

ஈழத்தமிழர் பிரச்சினை, காவிரி விவகாரம், உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 2006&ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 12&க்கும் அதிகமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றின் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மீண்டும், மீண்டும் தீர்மானங்களை நிறைவேற்றி

அனுப்புவதால் என்ன பயன் ஏற்படப்போகிறது? அதுவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை தாமதப்படுத்தும் செயலாகவே அமையும்.எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகங்களை தமிழக ஆட்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலகி அரசியலமைப்புச் சட்ட நெருக்கடியை ஏற்படுத்துதல், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்டது போன்ற மிகப் பெரிய போராட்டத்தை உழவர்களையும், மக்களையும் முன்னிறுத்தி நடத்துதல் ஆகியவை தான் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படுவதற்கும் வகை செய்யும். எனவே, தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசின் துரோகத்தை தூக்கி சுமக்காமல் அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.