தமிழக அரசின் நிலைப்பாட்டை பொருட்படுத்தாமல் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பிரதமரிடம்  எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டாட்சி தத்துவம், இருதரப்பு உறவுகள் ஆகியவற்றைப் பற்றி கவலைப்படாமல், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி இப்படி ஒரு கோரிக்கையை எடியூரப்பா முன்வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது கொந்தளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்; கர்நாடகத்தைச் சேர்ந்த சதானந்த கவுடா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த பாரதிய ஜனதா தலைவர்கள் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் நேற்று சந்தித்த எடியூரப்பா, மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளார். எனவே, தமிழகம் ஒப்புதல் அளித்தால் மட்டும் தான் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க முடியும் என்ற கட்டுப்பாட்டைத் தளர்த்தி அடுத்தக்கட்ட பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்ற போதிலும், தமிழகத்தின் நலனை பாதிக்கும் மேகதாது அணை திட்டத்திற்கு தமிழகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோருவதே இரு மாநில உறவுகளுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் கொடிய தீங்கு விளைவிக்கும் செயலாகும்.

தமிழகத்தின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ள நேரம் மிகவும் முக்கியமானதாகும். மேகதாது அணையை கட்டுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி கர்நாடகத்தின் சார்பில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆய்வுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி நடைபெற்ற சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுனர் குழு கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வுகளை நடத்த அனுமதியளிக்க முடியாது என்று முடிவெடுக்கப்பட்டு, அது முறைப்படி கர்நாடக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது. இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும்.

இந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அதன் வல்லுனர் குழு ஆகியவற்றின் முடிவை மதிக்காமல் குறுக்கு வழியில் மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வாங்க எடியூரப்பா முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதாக இருந்தால் கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதலைப் பெற்றுத் தான் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தெளிவாக தீர்ப்பளித்துள்ளன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் டாக்டர்அன்புமணி எழுப்பிய வினாக்கள் தொடர்பாக அவருக்கு அப்போது மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி அவர்கள் எழுதிய கடிதத்திலும் இந்த விவரங்களை விளக்கியுள்ளார்.

2008-09 காலத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நலனுக்காக ஓகனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முயன்ற போது, கர்நாடக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டுலுவைத் தாண்டி தமிழகத்திற்கு சொந்தமான பகுதியில், முழுக்க முழுக்க தமிழகத்திற்கு சொந்தமான தண்ணீரை எடுப்பதற்கு கர்நாடகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அப்போது எடியூரப்பா கூறியிருந்தார். ஆனால், இப்போது தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரை தடுத்து நிறுத்துவதற்காக அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று அதே எடியூரப்பா கூறுவது மிகவும் விசித்திரமாக உள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கப்பட்டால் அது தமிழகத்திலுள்ள காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கி விடும். எனவே, எந்த அடிப்படையிலும் மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது. அதேபோல், கர்நாடக அரசும் மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும். மாறாக, கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் கட்டப்பட்டுள்ள அணைகளுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால், தமிழகத்திற்கு கூடுதல் நீரை திறந்து விட எடியூரப்பா ஆணையிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.