சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவுகள் வந்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் வரத் தொடங்கினர். ஆனால், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்பை எடுத்து பல பெண்கள் திரும்பி சென்று விட்டனர். சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் ஏற்பட்ட நிலையில் சுற்றுவட்டார பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு பெண்கள் வருவதை எதிர்த்து தந்திரிகள், நம்பூதிரிகள் என 18 ஆம் படி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இந்த நிலையில் சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது குறித்து, பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். ஆனால், ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் இரு வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசும், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும் இந்த முரண்பட்ட கருத்தை தெரிவித்துள்ளனர். 

ராமதாஸ் பேசும்போது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும். பெண்கள் கோயிலில் பூஜை செய்யலாம் என்கிற புரட்சி மேல்மருவத்தூரில் நடந்துள்ளது. 48 வருடங்களுக்கு முன்பே இந்த புரட்சி நடந்துள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி, சபரிமலை பாரம்பரியமான கோயில். காலம் காலமாக சில விதிகளை கடைபிடித்து வருகிறார்கள். அந்த பழக்க வழக்கம் அப்படியே இருக்க வேண்டும். ஐதீகம் காக்கப்பட வேண்டும். தேவாலயங்களில்போப், பிஷப் உள்ளிட்டோர் இருக்கின்றனர். 

அங்கு பெண்களை கொண்டு வர வேண்டும் என்பதை நீதிமன்றம் கூற முடியுமா? மத விஷயத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக கட்சியின் நிறுவனரும், இளைஞரணி தலைவரும் முரண்பட்ட கருத்துக்களைக் தெரிவித்திருப்பது பாமக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.