*    டில்லியில்  உள்ள மாணவர்களிடம் நாங்கள் பேனாக்களையும், கம்ப்யூட்டர்களையும் கொடுக்கிறோம். ஆனால், பா.ஜ.க.வினர் துப்பாக்கிகளையும், வெறுப்பையும் கொடுக்கின்றனர். எனவே டெல்லி மக்கள் தங்கள் குழந்தைகள் என்னவாக வேண்டும் என்பதை சட்டசபை தேர்தலில் அளிக்கும் ஓட்டின் மூலம் முடிவு செய்ய வேண்டும். 
-    அரவிந்த் கெஜ்ரிவால் (டில்லி முதல்வர்)

*    பா.ஜ. தலைவர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசுகின்றனர். அதனால்தான் ஜாமியா பல்கலையில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அமைச்சர்களே அவ்வாறு பேசும்போது இது போன்ற விபரீதம் நடக்கத்தான் செய்யும். பிரதமர் மோடி அஹிம்சையை ஆதரிக்கிறாரா அல்லது வன்முறையை ஆதரிக்கிறாரா என தெளிவாக தெரிவிக்க வேண்டும். 
-    பிரியங்கா காந்தி (காங்கிரஸ் பொதுசெயலாளர்)

*    என் படமான சைக்கோவில் லாஜிக் இல்லை! என்கிறார்கள். ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை. தன் அண்ணன் ராவணனை எதிர்த்து ராமனோடு இணைகிறான் விபீஷ்ணன். ஆனால் கும்பகர்ணனோ ராவணனுக்கு சப்போர்ட் செய்கிறார். அவனோடு சேர்ந்து சாவப்போவது தெரிந்தும் சப்போர்ட் பண்ணுகிறான். இதிலெல்லாம் எந்த லாஜிக்கும் இல்லை. போரில் எல்லா ஆயுதங்களும் தீர்ந்து போகிறது, உடனே இன்று போய், நாளை வா! என்கிறான் ராமன். அதிலும் லாஜிக் இல்லை. 
-    மிஷ்கின் (இயக்குநர், நடிகர்)

*    கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் கல்வி வியாபாரமாகிவிட்டது. இதை மறைக்கவே ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தரமான கல்வியை கற்றுக் கொடுக்க தடை செய்ய கூடாது. அந்த பொதுத்தேர்வு அறிவிப்பை தமிழக பா.ஜ.க. வரவேற்கிறது. 
-    நாராயணன் திருப்பதி (பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்)

*    ஆட்சி அதிகாரத்தின் உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை ஊழல் பரவியிருப்பதை டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் - 4 முறைகேடுகள் பறைசாற்றுகின்றன. இந்த நிலையிலும் நேர்மையை கடைப்பிடிக்கும் சிலர் உள்ளனர். அவர்கள் தங்கள் நம்பிக்கையை கைவிட வேண்டாம். நாளை நமதே!
-    கமல்ஹாசன் (ம.நீ.ம. தலைவர்)
*    தஞ்சை டெல்டா பகுதியானது விவசாய மண்டலம். இதை பெட்ரோல் மண்டலம் ஆக்கும் சூழ்நிலையை  மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி எந்த இடத்திலும் திட்டத்தை செயல்படுத்தலாம் என கூறுவது, டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கும் செயல். 
-    சிவா (தி.மு.க. எம்.பி.)

*    தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் 1967ல் 41 சதவீத ஓட்டுக்களை வைத்திருந்தது. அந்த சதவீதம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து, இப்போது ஐந்து சதவீதமாக மட்டுமே உள்ளது. இதை மீண்டும் நாற்பத்தைந்து சதவீதமாக உயர்த்துவோம். 
-    கே.எஸ்.அழகிரி (தமிழக காங் தலைவர்)

*    ஆளுங்கட்சியினர்  தி.மு.க.வின் உள்ளாட்சி பிரதிநிதிகளை சுதந்திரமாக செயல்பட விடமாட்டார்கள். இடையூறு செய்வார்கள். அதற்காக ஆளுங்கட்சிக்கு அடிபணிந்துவிடாதீர்கள். கூட்டு வைக்காதீர்கள் அவர்களோடு!  என வேண்டி கேட்டுக் கொள்கிறேன் உங்களை. எந்த பிரச்னை வந்தாலும் நீதிமன்றம் உள்ளது. மக்கள் மன்றம் உள்ளது. கவலை வேண்டாம். 
-    மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*    அகில இந்தியாவில் மட்டுமல்ல, ஈரேழு லோகத்திலும் வாடகை கட்டடத்தில் இருந்தபடி உரிமையாளர் சார்பில், அவதூறு வழக்கு தொடர்ந்த ஒரே நிறுவனம், தி.மு.க. கட்சியின் பத்திரிக்கையான முரசொலி மட்டும்தான். வெறும் கையால் முழம் போடுவதில் தி.மு.க.வினரை வெல்ல ஆளே இல்லை போல. 
-    டாக்டர். ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)