தொழில்துறை வளர்ச்சி, வீட்டுவசதித்துறை வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்குடன் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன் மீதான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து குறைத்து வருவது அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரத்தில் நாட்டு நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மூத்த குடிமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது எனக் கூறியுள்ளார் ராமதாஸ்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய ரிசர்வ் வங்கி பொதுத்துறை வங்கிகளுக்கு அளிக்கும் கடன் மீதான வட்டி விகிதத்தை கடந்த 4-ஆம் தேதி 0.25% குறைத்தது. அதற்கு முன் 5.40% ஆக இருந்த இந்த விகிதம் இப்போது 5.15% ஆக குறைந்து விட்டது. உலக அரங்கில் ஏற்பட்ட மாற்றங்கள், இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை சமாளித்து வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் ஆகியவற்றின் காரணமாக கடந்த ஓராண்டாக இந்தியாவில் வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடன் மீதான வட்டியை ரிசர்வ் வங்கி தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் இம்மாதம் 4-ஆம் தேதி வரையிலான 9 மாதங்களில் கடன் வட்டி விகிதம் 5 தவணைகளில் 1.35% குறைக்கப்பட்டுள்ளது. அதாவது பிப்ரவரியில் 6.50% ஆக இருந்த வட்டி விகிதம் இப்போது 5.15% ஆக குறைக்கப்பட்டுவிட்டது.

அதைத்தொடர்ந்து வங்கிகளில் இருந்து பெறப்பட்ட வீட்டுக் கடன், வாகனக் கடன், தொழில்கடன் ஆகியவற்றின் மீதான வட்டி குறைக்கப்பட்டிருக்கிறது. அதனால், அந்தத் துறைகளில் காணப்பட்ட மந்தநிலை ஓரளவு குறைந்திருக்கிறது. இது மிகவும் சாதகமான அம்சம் ஆகும். அதேநேரத்தில் வங்கிகளில் செய்யப்படும் வைப்பீடுகள் மீதான வட்டியும் அதே அளவில் குறைக்கப்பட்டிருக்கிறது. மூத்த குடிமக்கள் முதலீடு செய்துள்ள வைப்புத்தொகை மீதான அதிகபட்ச வட்டி விகிதம் கடந்த ஓராண்டில் 8.25%&இல் இருந்து 6.90% ஆக குறைக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கான வட்டி விகிதம் 7.75 விழுக்காட்டில் இருந்து 6.40% ஆக குறைந்திருக்கிறது. சாதாரண மக்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டதை விட மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதக் குறைப்பு தான் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிகளில் செய்யப்படும் பொதுவான வைப்பீடுகளில் இருந்து மூத்த குடிமக்கள் செய்யும் வைப்பீடுகளை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். வங்கிகளில் சேமிப்புக்காக செய்யப்படும் வைப்பீடுகளில் இருந்து மூத்த குடிமக்கள் செய்யும் வைப்பீடுகள் முற்றிலுமாக மாறுபட்டவையாகும். வங்கிகளில் வைப்பீடு செய்துள்ள மூத்த குடிமக்களில் பெரும்பான்மையினர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணி முடித்து, ஓய்வு பெற்ற பின்னர் கிடைத்த ஓய்வூதியப் பயன்களை வங்கிகளில் வைப்பீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டியை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் ஆவர். வங்கிகளில் வைப்பீடுகள் மீது வழங்கப்படும் வட்டி குறைக்கப்பட்டதால் இவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் குறைந்துவிட்டது.

வணிக வங்கிகளில் செய்யப்படும் ஒரு லட்ச ரூபாய் வைப்பீட்டுக்கு, கடந்த ஆண்டில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 8250 வட்டி வழங்கப்பட்டது. ஒரு மூத்த இணையர் ரூ.10 லட்சம் முதலீடு செய்திருந்தால் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.82,500 வரை வட்டி கிடைக்கும். அதையும் வேறு ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் பணத்தையும் வைத்துக் கொண்டு காலத்தை கடத்தி விட முடியும். ஆனால், இப்போது ரூ.10 லட்சத்திற்கான வட்டித் தொகை ரூ.13,500 குறைந்து ரூ.69,000 ஆக உள்ளது. இது அவர்களின் வட்டி வருவாயில் 17% குறைவு ஆகும். இதை வைத்துக் கொண்டு ஓர் இணையர் ஓராண்டை கழிப்பது சாத்தியமற்றதாகும். மூத்த குடிமக்களில் பெரும்பான்மையினர் முதுமை சார்ந்த நோய்களால் பாதிக்கப் பட்டிருப்பார்கள் என்பதால், அவர்களின் மாத செலவில் மருத்துவச் செலவு கணிசமானதாக இருக்கும்.

அதனால், ஆண்டுக்கு ஆண்டு அவர்களின் செலவு அதிகரிக்கக்கூடிய நிலையில், வட்டிக் குறைப்பால் வருமானம் குறைவதால் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வட்டி வருவாய் குறைவதால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க மருத்துவச் செலவுகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் மூத்த குடிமக்கள் ஈடுபடும் போது, அவர்களின் உடல்நலன் பாதிக்கப்படும். வட்டி மூலம் குறைந்த வருவாய் மட்டுமே கிடைப்பதால் அதிக வருவாய் ஈட்டும் நோக்கத்துடன், வங்கி வைப்பீட்டை எடுத்து பங்கு சந்தைகளில் முதலீடு செய்தால், சந்தையில் ஏற்படும் மாற்றங்களால் அவர்கள் தங்களின் மொத்த முதலீட்டையும் இழக்கும் நிலை ஏற்படக்கூடும். இது மிக, மிக ஆபத்தானது ஆகும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தான் வட்டிக் குறைப்பு செய்யப்பட்டது. கடன் மீதான வட்டி குறைக்கப்படும் போது, வைப்பீடு மீதான வட்டி குறைக்கப் படுவது வாடிக்கையானது தான். அதை குறை கூற முடியாது. ஆனால், வட்டிக் குறைப்பால் வங்கிகளில் மொத்தம் 14 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள 4.1 கோடி மூத்த குடிமக்களும், அவர்களின் குடும்பமும் பாதிக்கப்படும் என்பதால் இதை அரசு அலட்சியமாக கடந்து சென்று விடவும் முடியாது.

எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு தலையிட்டு மூத்த குடிமக்கள் செய்துள்ள வைப்பீடுகள் மீதான வட்டியை மட்டும் குறைந்தது ஒரு விழுக்காடு அதிகரித்து வழங்க வேண்டும். மூத்த குடிமக்களின் வைப்பீட்டுக்கு கிடைக்கும் வருவாய்க்கு வருமானவரி விலக்கும் வழங்க வேண்டும் என இவ்வாறு கூறியுள்ளார்.