ramadoss advised tamilnadu government

சிங்கப்பூர் போன்று சென்னையிலும் இலவச சைக்கிள் பயன்பாட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள இலவச சைக்கிள் பயன்பாட்டுத் திட்டம் பயணிகளிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சுற்றுச்சூழலுக்கும், உடல் நலனுக்கும் நன்மை பயக்கக்கூடிய இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கதாகும். 

ஆனால், மொத்தம் 120 சைக்கிள்கள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதால் தேவைக்குப் போதுமானதாக இல்லை. சைக்கிள்களை எடுத்த இடத்தில் மீண்டும் விட வேண்டியது இருப்பதால் பல்வேறு இடங்களுக்கு தொடர் பயணம் மேற்கொள்பவர்களால் இந்தச் சைக்கிள்களைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. 

சிங்கப்பூர் உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இலவசமாகச் சைக்கிள்களைப் பயன்படுத்தும் திட்டம் உள்ளது. அதன்படி ஒரு நகரில் எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் சைக்கிள்களை எடுத்து எங்கு வேண்டுமானாலும் விட்டுச்செல்ல முடியும். சென்னையிலும் முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்த்து பயனாளர்களைப் பதிவுசெய்து, செல்போன் செயலி மூலம் இதேபோன்ற திட்டத்தைச் செயல்படுத்த முடியும். 

இதன்மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களும் பஸ் அல்லது ரயில் நிலையங்களில் இருந்து சைக்கிள்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு எளிதில் செல்லலாம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அதிகபட்சமாக ரூ.20 கோடிகூடச் செலவாகாது. எனவே, இந்தத் திட்டத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.