ராமதாசும் திருமாவளவனும் ஒன்று சேர்ந்து விட்டால் தமிழக அரசியலே மாறிவிடும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பவன் நான் என இயக்குனர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
ராமதாசும் திருமாவளவனும் ஒன்று சேர்ந்து விட்டால் தமிழக அரசியலே மாறிவிடும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பவன் நான் என இயக்குனர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது என்னை ராமதாசுக்கும் பிடிக்கவில்லை திருமாவளவனுக்கு பிடிக்கவில்லை இது தேவைதானா எனக்கு எற வருத்தம் தெரிவித்துள்ளார்.
மண்மன மாறாத திறை இயக்குனர்களில் ஆகச்சிறந்த திரை இயக்குனர்களின் ஒருவர்தான் தங்கர்பச்சான். இவர் எடுத்த ஒவ்வொரு படமும் கிராமத்தை ஒட்டியே எடுக்கப்பட்டது ஆகும். அவர் எடுத்த படங்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் அவரின் பேச்சுகள் அரசியல் கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் அரசியல் தொடர்பான கருத்துக்களை காட்டமாக வெளிப்படுத்தி வருகிறார்.

பெரும்பாலான கருத்துக்கள் திமுகவை விமர்சிக்கும் வகையிலேயே இருந்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வாக்குறுதிகளை மக்களிடம் சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் அதை தங்கர்பச்சான் கடுமையாக விமர்சித்தார். எப்படியாவது வாக்குகளைப்பெற்று அதிகாரத்தை கைப்பற்றி விட வேண்டும் என்ற வெறியில் அரசியல்வாதிகள் பேசும் பேச்சுகளை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசாவை கடுமையாக விமர்சித்தார்.
திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பின்னர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி எப்படி இருக்கிறது என அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஸ்டாலின் எதையாவது மக்களுக்கு செய்யவேண்டும். தற்போது நல்ல அதிகாரிகளை நியமித்திருக்கிறார், அதை வைத்து மட்டுமே ஆட்சி நல்லபடியாக நடக்கிறது என கூற முடியாது. ஒரு மனிதன் அவன் வாழ்நாளில் அதிகம் செலவிடுவது கல்விக்கும் மருத்துவத்திற்கும் தான். ஆனாலும் ஏன் எல்லோரும் தனியாரையே அதற்கு நாடுகிறார்கள் என அவர் கேள்வி எழுப்பினார். இதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக அவர் பாமகவை ஆதரித்து பேசி வந்தார். சில இடங்களில் மறைமுகமாகவும் பல இடங்களில் வெளிப்படையாகவும் அவர் பேசி வந்தார். ஆனால் அவர் ராமதாசிடம் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில் பல்வேறு அரசியல் சமூக கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். அதில் நீங்களும் பாமக நிறுவனர் ராமதாசும் ஆரம்ப காலத்தில் நெருக்கமாக இருந்தீர்கள் தற்போது உங்களுக்குள் பிளவு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறதே என எழுப்பப்பட்ட கேள்விக்கு நானும் ராமதாஸும் ஐந்து நிமிடம் கூட தனியாக சந்தித்து உரையாடி இருக்க மாட்டோம். ஆனால் ஏதாவது விழாவில் பார்ப்பதோடு சரி, நீங்கள் தான் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர் விளிம்புநிலை மக்களுக்கான குரலாய் இருப்பவர். நாம் உண்ணும் உணவு உடுக்கும் உடை என அனைத்துமே விளிம்புநிலை மக்களின் உழைப்பால் வந்தவைதான். அதற்காக அவர் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

ராமதாஸும் திருமாவளவனும் ஒன்று சேர்ந்தால் தமிழக அரசியலே மாறிவிடும் அதைநான் பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவர்களைப் பிரித்து வைத்திருப்பார்கள், இணைய விடமாட்டார்கள், ஜெய் பீம் படம் பார்க்கச் சொல்லி நான் சொன்னபோது என்னை பிரித்து மேய்ந்துவிட்டார்கள். உழைக்கும் மக்களிடம் அரசியல் இருந்தால் தான் எல்லாமே மாறும், தற்போது என்னை ராமதாசுக்கும் பிடிக்கவில்லை- திருமாவளவனுக்கும் பிடிக்கவில்லை தேவைதானா இந்த நிலைமை எனக்கு என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
