விஷ சாராயத்தால் தொடரும் பலி..! ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பேரணி- திமுகவை மிரட்டும் எடப்பாடி
விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், திமுக அரசு மீது புகார் தெரிவிக்கும் வகையில், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது.
கள்ளச்சாராயம் பலி
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ளச்சாரயம் குடித்த 22 பேர் அடுத்தடுத்து பலியான நிலையில், 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்திற்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கள்ளச்சாராய ஒழிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பல ஆயிரம் லிட்டர் கள்ள சாரயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்
தமிழகத்தில் கள்ள சாரய மரணத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் தேனாறும் பாலாறும் ஓடும் என்றார்கள். ஆனால் கள்ளச்சாராயம்தான் ஓடுகிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் தாராளமாகக் கிடைக்கின்றன. கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்தநிலையில், திமுக அரசில் சட்டம் ஒழுங்கு மோசாமக இருப்பதை ஆளுநரிடம் புகார் தெரிவிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது
ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி
இதனையடுத்து தமிழகத்தில் நடக்கும் கள்ளச்சாரய விற்பனையும், அதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்தும் ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக சென்று தமிழக ஆளுநர் ஆர்என் ரவியிடம் மனு அளிக்கப்படவுள்ளது. வரும் 22 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சைதாப்பேட்டை சின்னமலையிலிருந்து பேரணியாக சென்று ஆளுநர் மனு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்