மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின் எம்.பி. பதவி காலம் ஏப்ரல் மாதத்தில் முடிந்தது. இதனால், அவர் வகித்த வந்த துணைத் தலைவர் பதவியும் காலியானது. எனவே புதிதாக துணைத் தலைவர் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் சார்பில் மீண்டும் மாநிலங்களளை உறுப்பினர் ஆனதால், அவர் ஆளுங்கட்சி சார்பில் மீண்டும் துணைத் தலைவர் தேர்தலுக்கு களமிறக்கப்பட்டுள்ளார்.


அவரை போட்டியின்றி தேர்வு செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 245. இதில் 123 மெஜாரிட்டி ஆகும்.  தற்போது ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 113 உறுப்பினர்கள் உள்ளனர். பிஜு ஜனதா தளம், டி.ஆர்.எஸ். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆதரவுடன் ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் போட்டியின்றி தேர்வு செய்ய ஆளும் பாஜக விரும்புகிறது. 
ஆனாலும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்தும் எண்ணத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக திமுக மூத்த எம்.பி.யான திருச்சி சிவாவின் பெயர் அடிபடுகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த மாநிலங்களவை  துணைத் தலைவர் தேர்தலிலும் திருச்சி சிவா பெயர் அடிப்பட்டது. ஆனால், கடைசியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். நாளையோடு வேட்புமனுத்தாக்கல் முடிவடைய உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்பது தெரிய வரும்.