திமுகவில் மூத்த தலைவர்களாகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களாக இருக்கும் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவனுக்கு எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விரைவில் காலியாக உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் யாரெல்லாம் எம்.பி. பதவியைப் பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து நாடாளுமன்றம் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், நவனீதகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேரின் பதவிக் காலம் ஜூன் மாதத்தோடு நிறைவடைகிறது. இந்த ஆறு இடங்களை நிரப்புவதற்கான தேர்தல், இந்த மாதம் இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் பலத்தில்தான் கட்சிகள் இந்தப் பதவியைப் பிடிக்க முடியும். ஒரு எம்.பி. பதவியைப் பெற வேண்டுமென்றால், 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தமிழக சட்டப்பேரவையில் திமுக கூட்டணிக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதன் அடிப்படையில் 4 எம்.பி. பதவிகளை இக்கூட்டணியால் வெல்ல முடியும்.

அதிமுக - பாஜகவுக்கு 70 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே, இக்கூட்டணியால் 2 எம்.பி. பதவிகளை வெல்ல முடியும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஓரிடத்தை எதிர்பார்க்கிறது. மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்துவிட்டதால், வாய்ப்புள்ள இடங்களில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் எம்.பி. பதவிகளைப் பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. அதன் அடிப்படையிலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் எம்.பி. பதவிக் காலம் முடிவடைவதாலும், அவர் திமுக ஆதரவுடன் எம்.பி. பதவியைப் பிடிக்க காய் நகர்த்தி வருகிறார். எனவே, கூட்டணி தர்மம் கருதி காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடத்தை திமுக ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சிய 3 பதவிகள் திமுகவில் யார் பெறுவார்கள் என்பதில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. திமுகவில் மூத்த தலைவர்களாகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களாக இருக்கும் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவனுக்கு எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2009-இல் வட சென்னை மக்களவை எம்.பி.யாக இருந்த டி.கே.எஸ். இளங்கோவன், 2014-இல் தென் சென்னையில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009-ல் தென் சென்னையில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஆர்.எஸ். பாரதி, பின்னர் நடைபெற்ற தேர்தலில் போட்டியிடவில்லை. 2016-இல் இவர்கள் இருவரையும் மாநிலங்களவை எம்.பி.யாக திமுக தலைமை அனுப்பி வைத்தது. தற்போதும் இவர்கள் இந்த பதவியைப் பிடிக்கும் ரேஸில் இருக்கிறார்கள். என்றாலும் எதிர்க்கட்சிகளுக்கு சூடாகப் பதிலடி தரும் ஆர்.எஸ். பாரதி அந்த ரேஸில் முன்னிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது இவர்கள் இருவருடைய பதவிக் காலம் முடிவடையும் நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதாவது, பழைய முகங்களான இவர்களுக்கு பதவியை கொடுத்து திமுக தலைமை அலங்கரிக்குமா என்பதுதான் கேள்வி. அதே வேளையில் திமுகவில் எம்.பி. பதவிக் கனவில் பலரும் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தேனியில் தங்கத் தமிழ்ச் செல்வன், கோவையில் கார்த்திகேய சிவசேனாபதி, நாகையில் ஏ.கே.எஸ். விஜயன் போன்றோர் மாநிலங்களவை எம்.பி. பதவிக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாக திமுகவில் பேசப்படுகிறது. இதில் ஏ.கே.எஸ். விஜயன் 1999, 2004, 2009 என மூன்று முறை மக்களவை எம்.பி.யாக இருந்தவர். தற்போது தமிழக கேபினெட் அமைச்சர் அந்தஸ்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருக்கிறார். இவர்களும் எம்.பி. பதவியைப் பிடிக்கும் ரேஸில் சுழன்றுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களைத் தவிர புது முகங்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
திமுக வட்டாரங்களில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்பாளர்கள் பற்றி பல்வேறு தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் யார் என்பது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தெரிந்துவிடும்.
