முதல்வர் பழனிசாமி உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று கூறியதால் மீண்டும் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று முத்துக்கருப்பன் எம்.பி அந்தர் பல்டி அடித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அதிமுக எம்பிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக மக்களுக்காக தனது பதவியை ராஜினமா செய்வதாக முத்துகருப்பன் எம்.பி தெரிவித்திருந்தார்.

இதில், ஜெயலலிதா காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தொடர்ந்து போராடியவர், தமிழகத்தில் 19 மாநிலங்கள் காவிரி நீர் இல்லாமல் பாதிக்கப்படுகின்றன. ஜெயலலிதா போராடி தீர்ப்பை பெற்றார் அந்தத் தீர்ப்பை செயல்படுத்தாமல் உள்ளனர்.

நீதித்துறையை மிகவும் மதிக்கிறோம், உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட பிறகும் காலதாமதம் செய்யப்படுகிறது. 2 மாநில பிரச்னை என்பதால் மத்திய அரசு தான் அதனை செய்ய முடியும். ஜெயலலிதா அளித்த பதவி என்பதால் மக்களின் நியாயமான கோரிக்கைக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.

நான் என்னுடைய தொலைபேசியை அணைத்து வைத்துவிட்டேன், முதல்வர் பேசியதாக சொன்னார்கள். ஆனால் நான் அவர்களிடம் பேசுவதாக இல்லை, ஏனெனில் என்னுடைய அண்ணன்மார்களிடம் பேசினால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று சொல்வார்கள். ஜெயலலிதா கொடுத்த பதவி அவர் பாடுபட்ட காவிரி விஷயத்திற்காக ராஜினாமா செய்கிறேன்.

கட்சியில் ஒரு பதவி கொடுத்தால் அது அவர்களின் பொறுப்பு, ஆனால் ஜெயலலிதா கொடுத்த பதவி இது. மிகுந்த மனவேதனையுடனே நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்த மக்களுக்கு பயன்படாத பதவி எதற்காக என்பதால் தான் நான் ராஜினாமா செய்கிறேன் என பக்கம் பக்கமாக எழுதிய ராஜினாமா கடிதத்தை படித்துக் காட்டிய எம்.பி  மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமாகிய வெங்கைய்யா நாயுடுவிடம் இன்று அனுப்பி வைத்தார்.

ஆனால், முத்துகருப்பனின் ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு ஏற்க மறுத்தார். ராஜினாமாவிற்கான காரணங்களைக் குறிப்பிட்டும், தமிழில் ராஜினாமா கடிதத்தை அளித்ததாலும் கடிதம் ஏற்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜினாமா நிராகரிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த முத்துக்கருப்பன் எம்.பி, மீண்டும் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்குமாறு கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். காலையில் செய்தியாளர்களிடம் பேசிய முத்துக்கருப்பன் முதல்வர் சமரசம் பேசி ராஜினாமா செய்யவிடமாட்டார் என்பதால் போனை ஆஃப் செய்துவிட்டதாகவும் சொன்ன இதே எம்.பி தற்போது ராஜினமா செய்யமாட்டேன் என அந்தர் பல்டி அடித்துள்ளதை வலைதளங்களில் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாகியிருக்கிறது.