என்னை ஜெயலலிதா அடித்தார் என அழுது சர்ச்சையை கிளப்பிய அதிமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தார். 

இந்தியாவில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக இருந்தாலும், தமிழகத்தில் மட்டும் திராவிட கட்சிகளை எதிர்த்து ஒன்று செய்யமுடியவில்லை. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட அனைத்து வகையான தேர்தலில் டெபாசிட் இழப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தது. 

இந்நிலையில், தமிழகத்தில் எப்படியாவது பாஜக வளர்ச்சியடைய பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் நமீதா, ராதாரவி, பேரரசு உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில், அடுத்த கட்டமாக ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னாள், இந்நாள் அரசியல்வாதிகள் சிலரையும் பாஜகவில் இணைய தற்போது முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், ஜெயலலிதா என்னை அடித்தார் என மாநிலங்களவையிலேயே பெரும் குண்டை தூக்கி அதிர வைத்தவர் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா. தூத்துக்குடி மாநிலங்களவை தொகுதியில் எம்.பி.யாகவும் பொறுப்பு வகித்து உள்ளார். தொடர்ந்து சர்ச்சைகளின் நாயகியாக இருக்கும் இவர், தொடர்ந்து பல இடங்களில் பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்துவந்தார். தமிழகத்தில் மோடியின் ஆட்சி அமைந்தால்தான் நல்லாட்சி பிறக்கும் என அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். மேலும், மோடிக்கு ஆதரவாகவே தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டிருந்தார். இவர் விரைவில் பாஜகவில் ஐக்கியமாக உள்ளதாக தகவல் வெளியாகின. 

இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன், முரளிதர ராவ் உள்ளிடோர் முன்னிலையில் பாஜகவில் சசிகலா புஷ்பா இணைந்தார். ஏற்கனவே, அதிமுகவில் இருந்து விலகி நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து சசிகலா புஷ்பாவும் இப்போது பாஜகவில் இணைந்துள்ளது அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய செய்துள்ளது.