காவிரி மேலாண்மை வாரியத்தை சீக்கிரமாக அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய பாஜக அரசு ஆளாகும் என ரஜினிகாந்த் எச்சரித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர், விவசாயிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரைத்துறையினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், பெப்சி ஊழியர்கள் என திரைத்துறை சார்ந்த அனைத்து அங்கத்தினரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்துவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக புறப்பட்ட ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய ரஜினிகாந்த், உச்சநீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டும் மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு விரைவாக அமைக்காவிட்டால், தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என எச்சரித்தார்.

மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர், வணிகர்கள் என பல தரப்பினரும் போராட்டங்களை நடத்துகின்றனர். ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக நடத்தப்படும் இந்த போராட்டத்தில் ஏழை விவசாயிகளை முன்னிறுத்தி அவர்களின் கண்ணீரை பதிவு செய்தால், அந்த வலி கர்நாடகா அரசுக்கு புரிகிறதோ இல்லையோ, கர்நாடக விவசாயிகளுக்கு புரியும். அது நமது போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் என ரஜினி தெரிவித்தார்.