ரஜினி மக்கள் மன்றத்தில் நியமனம், மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் என் ஒப்புதலுடனே அறிவிக்கப்படுகின்றன என்றும் அனுமதியின்றி நடந்ததாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் நடிகர் ரஜின்காந்த் விளக்கமளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அமைத்து அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்து, தொடர்ச்சியாக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

 

பேட்ட படப்பிடிப்பை ஒன்றுக்காக வெளிநாடு சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளிடம் பேசும்போது, கட்சி தொடங்குவதற்கான 90 சதவிகித பணிகள் முடிவடைந்து விட்டன; அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், நேற்று அவரது இல்லத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

மக்கள் மன்ற நிர்வாகிகள் நீக்கப்படுவது குறித்து அண்மையில் நடிகர் ரஜினியின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். நியமனம், மாற்றம் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் எனது ஒப்புதலுடனே நடப்பதாக ரஜினி அறிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நிர்வாகிகள் நீக்கம் தொடர்பாக எனது கவனத்திற்கு வந்த பிறகே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

பதவி பணம் ஆசை உள்ளவர்கள் அருகில் வர வேண்டாம் என்பது வெறும் பேச்சிற்காக அல்ல. நான் அரசியலுக்கு வந்தால், அதை வைத்து பதவி வாங்கணும், பணம் சம்பாதிக்கணும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன். ரசிகர் மன்றத்தை மட்டுமே வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம்.  குடும்பத்தைப் பராமரிக்காமல் மன்ற பணிகளுக்கு வருபவர்களை வரவேற்க மாட்டேன். சமூக அக்கறை கொண்டவர்களுக்கு மன்றத்தில் பொறுப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.