மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்ததில் இருந்து அவரது மறைமுக ஆதரவு தங்களுக்குத்தான் என தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் ரஜினியின் ஆதரவு தங்களுக்குத் தான் என கூவி வருகின்றன. இந்தத் தேர்தலுக்கு ரஜினியை துணைக்கு அழைத்திருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

 

மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெற இருப்பதால் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், வரும் தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளது. வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. கமல் ஹாசன் ஒரேயொரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது ஆண்டு தொடக்கவிழா நெல்லையில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் ’’கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்...என் நண்பர் கமல்ஹாசன், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்... என தெரிவித்துள்ளார். 

 

அதற்கு பதிலளிக்கும் வகையில் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், ‘’என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே, நாளை நமதே’’ எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரஜினியின் ஆதரவை அவர் வெளிப்படையாகக் கேட்டுள்ளார். 

 

இந்நிலையில் ரஜினியிஞ் ஆதரவு கமல் ஹாசன் கட்சிக்கு கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேதமின்றி நட்பு பாராட்டக்கூடியவர் ரஜினி. அதையும் தாண்டி ரஜினி, கமல் அரசியல் தாண்டி திரைத்துறையில் அவர்களது பால்ய காலம் தொட்டே தொடர்ந்து வருகிறது. திரைத்துறையில் தன்னை விட சீனியரான கமல் மீது எப்போதும் தனிப்பாசம் காட்டியே வருகிறார் ரஜினி. ஆனாலும், இருவரது ரசிகர்களும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்திருக்கின்றனர். ஆகையால் ரஜினியே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தாலும் அவரது ரசிகர்கள் கமலுக்கு வாக்களிப்பார்களா? என்பது சந்தேகமே...