ரஜினி படங்களுக்கும், கமல் படங்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கும். அது...ரஜினி படத்தின் கதையும், அவரோடு நடிக்கும் கேரக்டர்களும் ஏற்கனவே நன்கு அறிமுகமானவையாக இருக்கும். ஆனால் கமல் படத்திலோ கதையும் புதியதாய் இருக்கும், அவரோடு நடிப்பவர்களும் ஏற்கனவே அறிமுகமாகாதவர்களாகவே இருப்பார்கள். 

ஆனால் இவர்களின் அரசியலிலோ இந்த லாஜிக் தலைகீழாக இருக்கிறது. ஆம், அரசியலுக்கு வந்துவிட்ட கமலின் கட்சியில் ஸ்ரீபிரியா, சிநேகன், கமீலா நாசர் என்று எல்லாம் தெரிந்த முகங்களாகவே இருக்கின்றன. ஆனால் கட்சியாகும் முன்பாக மக்கள் மன்றமாக உருவாக்கப்பட்டிருக்கும் ரஜினியின் மன்றத்தின் நிர்வாகிகளோ புதியவர்களாகவும், அவரது அரசியலின்  வடிவங்களோ கடும் குழப்பமாகவும் இருக்கின்றன. 

இவையெல்லாம் வைத்துக் கொண்டு ரஜினியால் மன்றத்தை தெளிவாக கட்டிமையக்கவும் முடியவில்லை, திறன் மிக்க தரமான நபர்களை பதவியில் நியமிக்கவும் முடியவில்லை. ஆக ஒட்டு மொத்தமாக எல்லாம் ஆடிக் கிடப்பதால் ரஜினியால் அரசியலுக்குள்ளும் முழு நம்பிக்கையோடு வரமுடியவில்லை. 

இதனால் மிக கடுமையான மன உளைச்சலிலும், கடுப்பிலும் இருக்கிறாராம் ரஜினி. இதற்கு உதாரணமாக, சமீபத்தில் ரஜினி மக்கள் மன்ற அமைப்புச் செயலாளரான இளவரசன் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டதை சுட்டிக் காட்டுகிறார்கள். இந்த முக்கிய பதவி காலியாகி கிடப்பதால் உரிய வேலைகளை உருப்படியாகப் பார்க்க முடியாமல்  ரவுசாகி கிடக்கிறதாம் ராகவேந்திரர் மண்டபம். 

2018ம் வருட துவக்கத்தில் ரஜினிக்கு திடீர் நண்பராகி, அவரிடம் பெரும் செல்வாக்கை பெற்று, சட்டென்று மன்றத்தின் உச்ச பொறுப்புக்கு வந்தர் டாக்டர்.இளவரசன். பதவிக்கு வந்ததும் அவர் ஆட்டமாய் ஆடுவதாக புகார்கள் வெடித்தன. ரஜினியின் ரசிகர் மன்றத்தில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக நாயாய் உழைத்தவர்களை சிம்பிள் காரணங்களை சொல்லி தூக்கி எறிந்தார் இளவரசன். நியாயம் கேட்டபோது...’மன்றத்துல முப்பது வருஷம் உழைச்சதெல்லாம் கட்சியில் பதவி பெற தகுதி இல்லை!’ என்று இளவரசன் ஒரே போடாக போட்டபோது அரண்டு போனது ரஜினியின் மன்றத்தினர் மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழகமும். 

இப்படியாப்பட்ட இளவரசனைதான் சமீபத்தில் ‘அவரது விருப்பத்தின் பேரில் விடுவிக்கப்படுகிறார்!’ என்ற வரியுடன் வீட்டுக்கு அனுப்பிவிட்டார் ரஜினி. அவரது மன்றத்தினர் இதில் குஷியோ குஷி. ஆனால் வெளியே போன பிறகும், ‘நானேதான் அந்த பதவியை ராஜினாமா செய்தேன். என்னுடைய பணி மன்றத்துக்கு தேவைன்னு ரஜினி வர்புறுத்தினால் மீண்டும் அது குறித்து யோசிப்பேன்.’ என்று விடாமல் வெளுத்தெடுக்கிறார். 

இந்நிலையில் சரியான நிர்வாகிகள் மன்றத்திற்கு அமையாததால் அல்லாடுகிறார் ரஜினி. இப்போது அவரது மன்ற நிர்வாகத்தில் இருக்கும் இன்னும் சிலரும் கூட விரைவில் களையெடுக்கப்படலாம் என்று தகவல். 

ஆக ஒண்ணுமேயில்லாத நிர்வாகத்தை வைத்துக் கொண்டு எப்படிடா அரசியலை துவக்க? என்று ரஜினி அல்லாட, டெல்லியிலிருந்து ‘சீக்கிரம் களத்துக்கு வந்து பிரசாரத்த ஆரம்பிங்க ஜி!’ என்று நெருக்கடி வந்து கொண்டே இருக்கிறதாம். 
ரஜினி!....தல சுத்துதா?!