தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்தை சேர்ப்பதற்கான சந்திப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழக தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இணைந்துள்ளன. அவர்களுக்கு பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உடன்பாடு கையெழுத்தாகின. தேமுதிக அதிக தொகுதிகள் கேட்பதால், தொகுதி பங்கீடு பிரச்னையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 

அதேபோல, திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற தோழமைக் கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனிடையே யாரும் எதிர்பாராத விதமாக நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை திடீரென சந்தித்தார். அப்போது அவர் திமுக கூட்டணிக்கு விஜயகாந்தை அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானது. 

அவர் கட்சி தொடங்கவில்லை என்றாலும், பாஜகவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளை ரஜினிகாந்த் தெரிவித்து வருகிறார். பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் அவர் பலசாலி தானே என்று மோடிக்கு ஆதரவாக கருத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக கொண்டு வர மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இதனையடுத்து ரஜினியை கொண்டு காய் நகர்த்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று சந்திக்கிறார். இந்த சந்திப்பின் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணையுமாறு விஜயகாந்தை ரஜினி வலியுறுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.