நான் என் வேலையை ஒழுங்காக பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் ஆனால் நீங்க உங்க வேலைய சரியா பார்த்தீங்களா ? என கேள்வி எழுப்பிய நடிகர் ரஜினிகாந்த், நீங்கள் உங்க வேலையா சரியா பார்த்திருந்தீங்கன்னா நான் ஏன் அரசியலுக்கு வரபோகிறேன் என அதிமுகவுக்கு அதிரடியாக பதில் கொடுத்தார்.

அரசியல் பிரவேசம் செய்துள்ள நடிகர் ரஜினி காந்த், அதிலும் சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் உடல்நலக் குறைவு போன்ற காரணங்களால் தமிழக அரசியலில் தற்போது வெற்றிடம் உருவாகியுள்ள நிலையில், ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் எடுத்திருக்கிறார்.

நான் எப்போ வருவேன்.. எப்படி வருவேன்னு.. யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரைக்டா வருவேன்” என்று சினிமாவில் வசனம் பேசிய ரஜினிகாந்த், ரசிகர்களின் 30 ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்களும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தாலும், அவரது வருகை அரசியல் களத்தில் சற்று தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கலங்கித்தான் போய் உள்ளனர்.

இந்நிலையில்  வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் சிலை திறக்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் இன்று கலந்துக்கொண்டார்.

அரசியல் அறிவிப்புக்கு பிறகு ரஜினிகாந்த் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி என்பதால், அவரை காண ரசிகர்களும், பொதுமக்களும் சாலையில் இரு பக்கத்திலும் திரண்டு இருந்தனர். நிகழ்ச்சியில் எம்ஜிஆர் சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். பின்னர் தனது முதல் அரசியல் பேச்சை ரஜினி பேசினார்.

அதிமுகவின் அடிப்படையே எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான். அவர்கள் இருவருமே சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான். ஆனால் எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் சினிமா துறையில் இருந்து இந்த அரசு ஏன் யாரையுமே அழைக்கவில்லை? சினிமா மீது உங்களுக்கு என்ன வெறுப்பு என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள் என பலர் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்கு நான் ஒன்று சொல்வேன்… நான் என் வேலையை ஒழுங்காக பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் ஆனால் நீங்க உங்க வேலைய சரியா பார்த்தீங்களா ? என கேள்வி எழுப்பிய அவர் நீங்கள் உங்க வேலையா சரியா பார்த்திருந்தீங்கன்னா நான் ஏன் அரசியலுக்கு வரபோகிறேன் என அதிரடியாக தெரிவித்தார்