rajinikanth sidelined dinakaran
ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரனால் தமிழக அரசியலில் எத்தகைய மாற்றங்கள் நிகழும் என பேசப்பட்டுவந்த நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பால், தினகரனை ஓரங்கட்டிவிட்டு தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாகிவிட்டார் ரஜினிகாந்த்.
ஊடகங்களை அணுகுதல், எத்தகைய நெருக்கடியிலும் கூலாக இருத்தல் போன்ற தனக்கே உரித்தான அணுகுமுறையால் பேசப்பட்டார் தினகரன். பலதரப்பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டு இரட்டை இலையை இழந்து, தான் கேட்ட தொப்பி சின்னமும் கிடைக்காத போதிலும் ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.
கடந்த ஓராண்டாகவே அதிமுகவை சுற்றியே அரசியல் பரபரப்பு நிலவியது. தினகரன் மற்றும் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோரே தமிழ்நாட்டு ஊடகங்களில் தலைப்பு செய்தியாகியிருந்தனர். அதிலும், ஊடகங்களை அணுகுவதிலும் செய்தியாளர்கள் என்ன கேள்வி கேட்டாலும் மறுக்காமல் பதிலளிப்பதாலும் தினமும் பேட்டி கொடுத்துவருகிறார் தினகரன். தினகரன் எங்கு சென்றாலும் செய்தியாளர்கள் குவிந்துவந்தனர்.
ஆனால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் அரசியல் அறிவிப்பு இன்று வெளியானதால், அதை சுற்றியே பரபரப்பு நிலவுகிறது. தினகரனின் முன்னால் எப்போதும் செய்தி சேனல்களின் லோகோக்கள் நிரம்பி வழியும். ஆனால், ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பால் தினகரன் இன்று கண்டுகொள்ளப்படவில்லை. தினகரனின் பேட்டியின்போது ஒருசில சேனல்களின் லோகோக்கள் மட்டுமே இருந்தன. அதிலும் ஒன்று ஜெயா டிவியினுடையது.
