தனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி  விருதுகளை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். 

மத்திய அரசின் விருதுகளை ரஜினிகாந்துக்கு இது முதன் முறையல்ல.  கடந்த 2000 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருதும், 2016 ஆம் ஆண்டு நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் இரண்டாவதான பத்ம விபூசண் விருதும் வழங்கி கௌரவப்படுத்தியது. இந்தியத் திரைப்படத்துறையின் ஆளுமைக்கான விருது 45 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் 2000ம் ஆண்டில் ரஜினிக்கு பத்மபூசண் விருது அளித்தது பாஜக ஆட்சியில் தான். அப்போது வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் அமைந்திருந்தது. அதேபோல 2016ம் ஆண்டு பத்மபூசன் விருதும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் வழங்கப்பட்டதே. இந்திய சர்வதேச திரைப்பட 45 வது விழாவில் ரஜினிக்கு திரைப்படத் துறையின் ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டதும் மோடி தலைமையிலான பாஜக ஆய்ட்சியில்தான். 

இப்போது வாழ்நாள் சாதனையாளர் விருதும் சிறப்பு விருதாக ஐகான் கோல்டன் ஜூப்ளி விருதும் மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது.  பாஜக தலைமை தமிழகத்தில் ரஜினி ஆதரவு இருந்தால் இங்கு ஆட்சியை பிடித்து விடலாம் என திட்டம்போட்டு வருகிறது. அதனை பாஜக தலைவர்கள் சிலரும் வெளிப்படையாகவே ரஜினி பாஜகவுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்து இருந்தனர்.

 

இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவதில் மும்மரமாக இருப்பதாகவும், இன்னும் மூன்று மாதங்களில் கட்சி அறிவிக்கப்பட்டு வரும் சட்ட மன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அவர் தனிக்கட்சி துவங்கும் முடிவில் இருப்பதால், ரஜினியை வளைக்கும் மற்றொரு ஆயுதமாக இந்த விருதை அவருக்கு மத்திய அரசு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் 2000ம் ஆண்டிலிருந்து, 2019ம் ஆண்டு வரை, கடந்த 20 ஆண்டுகளாக பாஜக அரசு ரஜினிகாந்துக்கு விருதுகளை அறிவித்து அவரை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. 

விருந்துக்கும், விருதுக்கும் மயங்காதவர்கள் உண்டா? என ஒரு சொலவாடை உண்டு. அப்படி ரஜினிகாந்த் விருதுக்கு மயங்குவாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.