பாஜகவை பொருத்தவரை சூப்பர் ஸ்டார் மோடி என்றும் உலக நாயகன் அமித்ஷா என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை நேற்று கூறிய நிலையில், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் தனது சூப்பர் ஸ்டார் பட்டத்தை நீக்கியுள்ளார். 

தமிழகத்தில் ரஜினி அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். விரைவில் புதிய கட்சியை தொடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுபோல் கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதாக கூறி, கடந்த மாதம் ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். கட்சியையும் அறிவித்தார். 

இதையடுத்து சிவகாசியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை பாஜகவை பொருத்தவரை சூப்பர் ஸ்டார் மோடி; உலக நாயகன் அமித்ஷா எனவும் ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவதால் பாஜகவுக்கு எந்த தாக்கமும் ஏற்படாது எனவும் தெரிவித்தார். 

இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்தில் இணைந்தார். ரஜினி டுவிட்டர் பக்கத்தில் இணைந்தாலும் எப்போதாவது தான் டுவீட் செய்வார்.45 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ரஜினிகாந்தை ஃபாலோ செய்து வருகின்றனர். 

ஆனாலும் அவர் இதுவரை 116 ட்வீட்களை மட்டுமே பதிவிட்டுள்ளார். மேலும் நரேந்திரமோடி, நடிகர் அமிதாப்பச்சன், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் தனுஷ், சௌந்தர்யா , இசை அமைப்பாளர் அனிருத் உட்பட வெறும் 24 பேர்களை மட்டுமே ரஜினி ஃபாலோ செய்கிறார்.

இந்நிலையில் தமிழிசை நேற்று பிரதமர் மோடியை பாஜகவின் சூப்பர் ஸ்டார் என்று கூறிய நிலையில் தனது சூப்பர் ஸ்டார் பட்டத்தை டுவிட்டர் பக்கத்தில் இருந்து அகற்றியுள்ளார் ரஜினிகாந்த்.