இனி நடிகர்கள் முதல்வர் ஆக முடியாது. விவசாயிகள் மட்டும்தான்  தமிழக முதலமைச்சராக இருக்க முடியும் என அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.

இலவு காத்த கிளி, இலவு காத்த கிளி என்று ஒரு கதை உண்டு. அந்த கதையில் வரும் இலவு காத்த கிளிக்கு நல்ல உதாரணம் யார் என்றால் அது நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் தான். 1980களிலேயே ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் 1989ல் வெளியான ராஜாதி ராஜா படத்திலேயே தனக்கு கட்சியும் வேண்டாம், ஒரு பதவியும் வேண்டாம் என்று பாடலாகவே பாடியிருப்பார் ரஜினி. ஆனாலும் கூட ஜெயலலிதாவுடனான மோதல் ரஜினியை அரசியல் பாதைக்கு இழுத்து வந்தது.

1996 தேர்தலில் ஜெயலலிதாவிற்கு எதிராக ரஜினி வாய்ஸ் கொடுக்க அந்த தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. அப்போது முதலே தேர்தலுக்கு தேர்தல் ரஜினியின் வாய்ஸ் என்ன என்கிற எதிர்பார்ப்பு எழும். ஆனால் ரஜினி கழுவுற மீனில் நழுவுற மீனாக தப்பித்து வந்தவர், ஜெயலலிதா, கலைஞர் மறைவிற்கு பிறகு அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். அதுநாள் வரை இலவு காத்த கிளியாக இருந்த ரஜினி ரசிகர்கள் துள்ளிக் குதித்து களம் இறங்கினர். ரசிகர் மன்றம் பலப்படுத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். அடிக்கடி ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்தித்து பேசினார். இதனால், ரஜினியின் அரசியல் வருகை தொடர்பான கருத்துகள் தொலைக்காட்சிகளில் அடிக்கடி விவாதப்பொருளாக இருந்து வருகின்றது. அதேபோல், செய்தித்தாள்களிலும் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது தொடர்பாக அமைச்சர் கருப்பணன் காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்;- படம் ரிலீசாகி வெற்றி பெறுவதற்கே ரஜினி அரசியலுக்கு வருவதாகவும், இனி நடிகர்கள் முதல்வர் ஆக முடியாது என்றும், விவசாயிதான் தமிழக முதல்வர் ஆக முடியும்" என்று தெரிவித்துள்ளார்.