நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் தொடங்க உள்ள கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அந்த கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கியுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ம் தேதியன்று வெளியிடப்படும் எனவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனுக்கு ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் பதவியும், அர்ஜூன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் ரஜினிகாந்த் அளித்துள்ளார். மேலும், கட்சி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இவரது அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. 

இந்நிலையில், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியில் மும்முரமாக இறங்கிய ரஜினி, கட்சிக்காக சில பெயர்களை பரிசீலனை செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், நடிகர் ரஜினி, மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் சேவை கட்சி தலைவரின் முகவரி, ஆணைய பதிவேட்டில் சென்னை எர்ணாவூர் என உள்ளதாகவும், ரஜினி கேட்ட பாபா முத்திரை சின்னத்தை ஒதுக்க தலைமை தேர்தல் ஆணையம் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதற்கு பதிலாக 234 தொகுதிகளிலும் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியதாக தகவல் தெரிவிக்கின்றன.


கடந்த 3 ஆண்டுகளாக நடிகர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கும் போதும் சரி, அரசியல் குறித்த நிகழ்வுகளை பேசும்போதும் சரி ரஜினி பாபாவின் முத்திரையை காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். எனவே ரஜினி கட்சியின் சின்னமும் அதுவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது ரஜினிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.