முதல் முறையாக ரஜினி தனது மக்கள் மன்றத்தின் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க தனது வெறித்தனமான ரசிகர் ஒருவரை நியமித்துள்ளார்.

தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க கட்சிகளுக்கு பிறகு அனைத்து கிராமங்களிலும் கிளைகளை கொண்ட ஒரு அமைப்பாக பல ஆண்டுகளாக இருந்து வருவது ரஜினி ரசிகர் மன்றம். தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ரஜினிக்கு ரசிகர் மன்றம் உண்டு. ஆக்டிவாகவோ இல்லை பெயரளவிற்கோ கூட ரசிகர் மன்றம் இருக்கும். 

இந்த நிலை உருவாக காரணமாக இருந்தவர் சத்தியநாராயணா. இவரை ரஜினியின் தளபதி என்றே கூறுவார்கள். அந்த அளவிற்கு ரஜினியின் நம்பிக்கைக்கு உரியவதாக சத்தியநாராயணா இருந்து வந்தார். ஆனால் 2009 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ரஜினியிடம் தகவல் சொல்லாமல் இவர் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக நிர்வாகிகளை செயல்பட வைத்ததாக கூறப்படுகிறது. 

அன்றோடு சத்தியநாராயணாவை ஒதுக்கிவிட்டு ரசிகர் மன்றத்தின் தலைவராக தன்னை தானே ரஜினி நியமித்துக் கொண்டார். ஆனால் மன்றப்பணிகளை ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா மற்றும் ரஜினியின் நீண்ட கால நண்பர் சுதாகர் கவனித்து வந்தனர். ரஜினி அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவித்த உடன் ரசிகர் மன்ற பொறுப்பாளரான சுதாகரின் கை ஓங்கியது. 

தொடர்ந்து லைக்கா நிறுவனத்தில் இருந்து வந்த ராஜூ மகாலிங்கம் மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் மூன்றே மாதங்களில் மக்கள் மன்றத்தில் இருந்து அவர் விரட்டி அடிக்கப்பட்டார். இவரை தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தின் உறவினரான இளவரசன் ரஜினி மன்றத்தின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் வந்த பிறகு ரஜினியின் நண்பரான சுதாகரே ஓரம் கட்டப்பட்டார். இளவரசன் ரஜினி மக்கள் மன்றத்தின் அதிகாரமிக்க நபரானார். மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்களை எல்லாம் ஒரு நொடியில் மன்றத்தில் இருந்து நீக்கினார். மேலும் சுற்றுப்பயணம் என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டமாக சென்ற இளவரசன் பெண் நிர்வாகிகளை மரியாதை இல்லாமல் பேசுவதாக புகார் எழுந்தது. 

இந்த நிலையில் அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து இளவரசனை நீக்கி ரஜினி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், 24-ம் தேதி ரஜினி வீட்டில் ஒரு முக்கியமான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பின் போது ரஜினியின் நண்பரான சுதாகர், ஒரு பத்திரிகையாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் ஆகியோர் இருந்தனர். 

சந்திப்பின் நிறைவில் இளவரசன் இதுநாள் வரை பார்த்து வந்த பணிகளை இனி நீ பார்த்துக் கொள் என்று ஸ்டாலினிடம் ரஜினி கூறியுள்ளார். இதனை கேட்டு ஸ்டாலின் திக்குமுக்காடிப்போனதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்டாலினுக்கு விரைவில் மாநில அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதுநாள் வரை ரஜினி ரசிகர் மன்றத்தில் அவரது ரசிகருக்கு உயர் பொறுப்பு வழங்கப்பட்டதே இல்லை. ஆனால் முதல் முறையாக ஸ்டாலின் எனும் தனது வெறி பிடித்த ரசிகரை ரஜினி தனது மன்றத்தின் உயர் பொறுப்பில் நியமித்துள்ளார். 

முன்னதாக மன்றம் தொடர்பான புகார்களை விசாரிக்கும் குழுவில் இளவரசன், காவல் முன்னாள் அதிகாரி ராஜசேகருடன் ஸ்டாலினும் இடம் பெற்று இருந்தார். தற்போது சென்னையிலேயே இருக்கும் ஸ்டாலின் விரைவில் தனது பணிகளை ராகவேந்திரா மண்படத்தில் தொடங்க உள்ளாராம்.