புதிதாக துவங்க இருக்கும் கட்சியில் ரஜினி தனது மனைவிக்கு முக்கிய பதவி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கமலைப் போல் அல்லாமல் கட்சி துவங்குவதற்கு முன்னதாகவே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட வேண்டும் என்று ரஜினி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கட்சிக்கான நிர்வாகிகளை ரஜினி தற்போது இறுதி செய்து வருவதாகவும் சொல்கிறார்கள். அடுத்த ஆண்டு நிச்சயமாக கட்சி ஆரம்பித்தாக வேண்டிய நெருக்கடி ரஜினிக்கு உள்ளது.

சட்டமன்ற தேர்தல் 2021 தான் என்றாலும் அடுத்த ஆண்டே கட்சியை ஆரம்பித்து தேர்தலுக்கு ஆயத்தமாக ரஜினி வியூகம் வகுத்துள்ளார். கட்சியின் முக்கிய பதவிகள் அனைத்தும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்குத்தான் என்பதில் ரஜினி உறுதியுடன் உள்ளதாக சொல்கிறார்கள். கட்சியில் புதிதாக சேர்பவர்களுக்கு கொடுக்கும் பதவி ஏற்கனவே தன்னுடன் இருப்பவர்களை அதிருப்தி அடைய வைத்துவிடக்கூடாது என்பதில் ரஜினி தெளிவாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

அந்த வகையில் கட்சியின் தலைவராக ரஜினி இருப்பார் என்றும் பொதுச் செயலாளர் பதவி அவரது நீண்ட நாள் நண்பர் சுதாகருக்கு வழங்கப்படும் என்கிறார்கள். இதே போல் பொருளாளர் பதவி பெண் ஒருவருக்கு கொடுக்கப்படும் என்கிறார்கள். கட்சி ஆரம்பிக்கும் போதே தனது மனைவிக்கும் பொறுப்பு வழங்க ரஜினி யோசித்து வருவதாக கூறுகிறார்கள்.

தனது உடல் நிலை மற்றும் தனது அரசியல் செயல்பாடு போன்றவற்றை மனைவி உடன் இருந்து கவனித்துக் கொள்ள ஏதுவதாக இந்த ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலும் கட்சியின் மகளிர் அணித் தலைவர் அல்லது உயர்மட்ட குழு உறுப்பினர் போன்ற பதவிகளில் ஒன்று லதாவுக்கு உறுதி என்று பேசப்படுகிறது. மற்றவர்களை போல் திரை மறைவில் லதா இயங்க வேண்டாம் என்று தான் இந்த முடிவை ரஜினி எடுத்ததாக கூறுகிறார்கள்.

அதே சமயம் குடும்ப அரசியல் என்கிற விமர்சனங்களை முதலிலேயே எதிர்கொள்ளும் வகையில் இந்த திட்டம் என்று கூறுகிறார்கள். ஆனால், லதாவுக்கு கட்சியில் பதவி கொடுக்க வேண்டும் என்று அவரை வழிநடத்தி வரும் முக்கிய நபர் வாதிடுவதாகவும் இதனால் ஏற்பட்ட நெருக்கடியே ரஜினியை இப்படி ஒரு முடிவை எடுக்க வைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. என்ன தான் ரஜினி உச்சத்திற்கு சென்றாலும் நம்மவாவில் ஒருவர் கட்சியில் முக்கியப்பதவியில் இருப்பது தான் சரி என்று அந்த முக்கிய நபர் இப்படி காய் நகர்த்துவதாக சொல்கிறார்கள்.